பக்கம்:சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

சிறந்த வாழ்வுக்குச் சில சிந்தனைகள்

வேண்டும். பகை கொள்ள வேண்டியதில்லை. குறைகளைக் கேட்பவர் மனமாற்றம் கொள்வர்.

உனக்கு ஒரு நன்மை ஏற்படுவது தடுக்கப்படும் போது சீற்றம் கொள்ளாதே. நீ புத்தி கூர்மையுடன் செயல்பட்டால் உனக்கும பெரிய நன்மை உண்டாகும்.

ஒரு மனிதன் பட்டங்களைப் பெற்று, மேலானவராக மதிக்கப்படும்போது, அவனைக் கண்டு வெறுப்பு கொள்ளாதே. அந்த நிலையை அவன் எப்படிப் பெற்றான் என்பதை நீ எண்ணிப் பார்த்துத் தெரிந்து கொள். நீ மனமாற்றம் கொள்வாய். பொறாமை அகலும்.

பட்டங்கள் எப்படிப் பெறப்படுகின்றன? அதனால் என்ன பயம்? தன்னை அடிமையாக்கிக் கொண்டால் பதவியும் பட்டமும் கிடைக்கும். எனவே, உனக்கு அப்படிப் பட்டங்களைப் பெற்று உயரும் நிலை ஏற்பட்டால் அதைப் பெரிதாகக் கருதாதே. உயர்ந்தவர்களிடம் பெறும் சலுகைகளுக்கு நீ தரும் விலை அதிகமானது என்பதை மறந்து விடாதே.

நீ ஏற்றுக்கொள்ள முடியாததைப் பிறர் அடையும்போது அவர்களைக் கண்டு பொறாமை கொள்ளாதே. இதை நீ உணராவிட்டால் கொடுமைகளை நீ புரிய வேண்டிய நிலை உருவாகும்.

நீ சிறப்பான நிலையை அடைந்தால் அதற் காக நீ கொடுத்த விலையை மதிப்பிட்டுப் பார். நீ ஒழுக்க சீலனாக இரு.