பக்கம்:சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

95

ஒருவனுக்கு நல்லவை ஏற்பட்டால் அவனுக்கு அதற்கான தகுதி இருக்கும்போது, நீ மகிழ வேண்டும். பிறர் மகிழ்ச்சியாக இருப்பதைக் கண்டு நீ பூரிப்பதன் மூலம் நீயும் மகிழ்ச்சி அடையலாம். தரக்குறைவாக நடக்காதே. கோழையின் செயல் களைப் புரியாதே. உன் மனசாட்சிக்குப் புறம்பாக நடக்காதே. வேதனையடையாது வாழ இதுவே வழி.

நுண்மதி இருந்தால் நீ மகிழ்ச்சியாக வாழ வழி ஏற்படும். விழிப்புணர்ச்சி இருந்தால் மனிதன் வருத்தமடையத் தேவை இல்லை. உன் செயற்பாட்டைச் சீராக அமைத்துக்கொள். மனத்தில் தீய நோக்கம் கொள்ளாது இருந்தால் உன் மன அமைதிக்கு எந்தக் கேடும் வராது.

ஊதியத்திற்காகப் பணி செய்பவன் வருந்துகிறான். சிலர் கண்ணீர் சிந்துவதும் பணத்தை எதிர்பார்த்துதான். அப்படிப்பட்டவர்கள் வருந்துவது ஏன் என்பது அவர்களுக்கே புரியாது. எப்படி வருத்தப்படுவதற்கு ஒரு நேரம் வாய்க்கின்றதோ, அதே போல மகிழ்ச்சி அடைவதற்கும் நேரங்கள் உருவாகும்.

அழுவதால் என்ன ஆகப்போகிறது? கண்ணீர் விட்டுக் கலங்கியவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள். கண்ணீரால் கவலைத் தீயை அணைக்க முடியாது. தவற்றை ஒப்புக் கொள்பவர்கள், துன்பத்தைத் தாங்கிக் கொண்டு பொறுமையாக இருந்தவர் அமைதியும் மகிழ்ச்சியும் அடைவர்.