பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்த்துரை 'சிறுவர் கலைக் களஞ்சியம்' என்னும் இந்தத் தொகுப்பு நூலை திரு. மணவை முஸ்தபா, எம்.ஏ., அவர்கள் வடிவாக்கியுள்ளார். நமது நாட்டுச் சிறுவர்கள் பொது அறிவில் சிறக்கவும், ஆர்வம் கொள்ள வும், சிறுவர்கள் - குறிப்பாகப் பள்ளி மாணவ மாணவியர், தாங்கள் தெரிந்துகொள்ள விரும்பும் பொருள், இடம், அறிஞர், கவிஞர் முதலான எதைக் குறித்தும் படித்துத் தெரிந்துகொள்ளவும் களஞ்சியங்கள் பெரிதும் பயன்படும். தென்மொழிகள் புத்தக நிறுவனம் சார்பில் வெளிவரும் யுனெஸ்கோ கூரியர்' என்னும் திங்கள் ஏட்டில் பொறுப்பாளராகப் பல ஆண்டுகள் தொண்டு செய்து வருபவர் மணவை முஸ்தபா அவர்கள். மொழி, கலை, வரலாறு, அறிவியல், செய்திகளைப் பல வண்ணப் படங்களுடன் நல்ல தமிழில் வடித்துத்தரும் அந்தப் பணி பலராலும் பாராட்டப்படுவது. ஒவ்வொரு ஏடும் - பாதுகாக்கப்படத்தக்கது. அந்தப் பணியுடன் தமிழ் நூல்கள் - அறிவியல் ஏடுகள் பலவற்றை வரைந்துள்ளவர் மணவை முஸ்தபா. தமிழில் குழந்தைகட்கான கலைக் களஞ்சியம் பத்துத் தொகுதிகளாக முன்னரும் வெளிவந்துள்ளது. ஆனால் ஒரே தொகுப்பாக வருமெனில் மாணவர்கள் வேண்டும் போதெல்லாம் எடுத்துப் பார்த்து விவரம் அறிய எளிதாகும் என் மணவை முஸ்தபா அவர்களிடம் நான் தெரிவித்தேன். அதன் பயனாக அவர் மேற்கொண்ட முயற்சி இந்தத் தொகுப்பு நூலாக வெளி வந்துள்ளது. பள்ளிப் பருவத்தினர் குறிப்பாகத் தமிழ்நாட்டுச் சிறார் அறிந்துகொள்ள வேண்டிய விவரங்கள் அகர வரிசையில் தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு தலைப்பிலும் தரப்பட்டுள்ள விளக்கம் எளிதாக விளங்குமாறு தெளிந்த நடையில் வரையப்பட்டிருப்பது சிறப்பாகும். அறிவியல் கலைத்துறைகளுக்கான தனித்தனிக் களஞ்சியங்கள் பல் கலைக்கழகங்களால் வெளியிடப்படுகின்றன. இது இளைஞர்கட்காக என்று வடிவு பெற்றமையின் விரிவாக அமையவில்லை என்பது குறையன்று. திரு மணவை முஸ்தபா அவர்களின் கடமை உணர்வுக்கும் தமிழ் ஆர்வத்துக்கும் எனது பாராட்டு என்றும் உரியதாம். அன்பன் க. அன்பழகன்