பக்கம்:சிலப்பதிகாரக் காட்சிகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

59

என்று கூறினான். அவனை, அப்பக்கமாக நகர் சோதனைக்கு வந்த பாண்டியன் கேட்டான். அவன் மறு இரவு முதல் ஒவ்வோர் இரவும் அந்தப் பார்ப்பனன் இல்லத்தைக் காவல் காத்து வந்தான்; ஒருநாள் இரவு வீட்டிற்குள் ஆடவன் பேச்சுக் குரல் கேட்டு உண்மை உணர விரும்பிக் கதவினை தட்டினான். உடனே கீரந்தை ‘யார் அது? என்று அதட்டினான். உடனே பாண்டியன், ‘சரி, வீட்டிற்கு உரியவன் வந்து விட்டான்; நமக்குக் கவலை இல்லை. ஆனால், நாம் அவசரப்பட்டுக் கதவைத் தட்டியதை அவன் தவறாகக் கருதித் தன் மனைவியின் ஒழுக்கத்தில் ஐயம் கொள்வானே! அடடா! என்ன செய்வது? என்று யோசித்து, முடிவில், ‘நான் இப்பொழுது இந்தத் தெருவிலுள்ள எல்லா வீட்டு கதவுகளையும் தட்டி, விட்டுப் போவதே நல்லது. எல்லோரும் இதனைப் பித்தன் - செயல் எனறு நினைத்துக் கொள்வர்’ என்று முடிவு செய்தான்; அப்படியே எல்லா வீட்டுக் கதவுகளையும் தட்டிவிட்டு மறைந்தான். மறுநாள் காலையில் அந்தத் தெருவில் இருந்த பார்ப்பனர் அனைவரும் அரசனிடம் சென்று, ‘இரவில் ஒரு பித்தன் வந்து எங்கள் வீட்டுக் கதவுகளைத் தட்டி எங்களை அச்சத்திற்கு உள்ளாக்கி விட்டான்’ என்று கூறி வருந்தினர். அரசன், ‘அறிஞரே, அப்பித்தின் அகப்பட்டால் அவனுக்கு என்ன தண்டனை விதிக்கலாம்? என்று கேட்டான். உடனே மறையவர், ‘கதவுகளைத் தட்டின அக் கையை வெட்டிவிட வேண்டும்’ என்றனர். உடனே அரசன் மகிழ்ந்து, அந்தக் கை இதுதான்’ என்று. கூறித் தன் கையை வெட்டிக் கொண்டான்.