பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள் அ.சினிவாசன்

119



"சரவணப்பூம் பள்ளியறைத்தாய் மாரறுவர்
திருமலைப் பாலுண்டான் திருக்கை வேலன்றே
வருதிகிரி கோலவுணன் மார்பம் பிளந்து

குருகு பெயர்க்குன்றம் கொன்றநெடுவேலே"

என்றெல்லாம் முருகக்கடவுளுடைய பெருமைகளைப் பாடி குன்று வாழ் மகளிர் ஆடுகின்றனர். முருகன் மீது மனமுருகிப்பாடும் இப்பாடல்கள் பக்திச்சுவை மிக்கதாக உள்ளன.

“பெண்ணே , என் அருமைத் தோழியே உன் கருத்தினைக் கூறுவாயாக, நாம் இதுவரை நமது கண்கள் சிவக்கும் படியாக இந்தத் தெளிவான நீரில் குதித்துக் குதித்து ஆடினோம். இப்போது அந்த விளையாட்டு முடிந்துவிட்டது. இனி நாம் அனைவரும் குரவைக்கூத்திற்காக கை கோர்த்துக்கொண்டு, நடுக் கடலில் பெரிய மாமரமாக நின்ற சூரபத்மனைக் கொன்றொழித்த வேலேந்தியாகிய முருகனைப் புகழ்ந்து பாடுவோம். வாருங்கள் என்றும்.

பாறைகளும் கற்களும் நிறைந்த பெரிய கடலின் உள்ளே முன் காலத்தில் புகுந்து அங்கு பெரிய மாமரமாய் நின்ற சூரபத்மனை ஒழித்த ஒளி மிகுந்த வேலானது சிறப்புமிக்க திருச்செந்தூரிலும் திருச்செங்கோட்டிலும் திருவெண்குன்றத்திலும் (சுவாமி மலை) திருவோரகத்திலும் ஒரு பொழுதும் நீங்காது நிலை கொண்டு எழுந்தருளியுள்ள முருகக் கடவுளின் கையில் உள்ள வேல் அல்லவா" என்றும்.

மயில்வாகனத்தின் மீது ஏறிச்சென்று அசுரர் கூட்டத்தின் பெருமையை அழித்து, விண்ணுலகத்தின் அரசனான தேவேந்திரனே கை தொழுது வணங்கும்படியாக அவனுடைய பகையை ஒழித்த வெண்ணிறமான வேல்யாருடைய வேல் என்றால் அது ஆறுமுகங்களும், பன்னிருகைகளும் கொண்ட இணையில்லாத அழகுடைய முருகப் பெருமான்கையில் ஏந்தியுள்ள ஒளிமிக்க வேலாகும்.