பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழும் தமிழ்நாடும் 231

ஊரகத் தேரும் ஒளியுடைப் பாணியும் என்று.இவை யனைத்தும் பிறபொருள் வைப்போடு ஒன்றித் தோன்றும் தனிக்கோள் நிலைமையும் ஒருபரிசா நோக்கிக் கிடந்த புகார்க் காண்டம் முற்றிற்று” என்று விரிவுபடக் காப்பியம் குறிப்பிடுகிறது.

இந்தப் பாடல் அடிகள் மிகுந்த கருத்துச்செறிவு கொண்டவையாகும். தமிழ்நாடு ஒன்று. அதில் முடியுடை வேந்தர் மூவர். அவர்களுள் சோழமன்னனின் சிறப்பையும், சோழநாட்டின் சிறப்பையும் இப்பாடல் அடிகள் சிறப்பாக விவரித்துக் கூறுகின்றன.

இப்பாடல் அடிகளில் சோழர்குல மன்னர்களின் பெருமைகள், அவர்களின் அரசியல் அறம், வீரம், ஆற்றல் ஆகியவைகளும், அவர்களுடைய பெருமைமிக்க மூதுாரான புகார் நகரின் மேம்பாடுகளும் பண்புகளும், அங்கு நடைபெறும் விழாக்களின் சிறப்புகளும், விண்ணவர் வரவும், குறையாத இன்பத்தில் மகிழ்ச்சியுடன் வாழும் அந்தச் சோழ நாட்டு மக்களின் மாண்பும், உணவுப்பொருள் வளமும் பெருக்கமும், அவர்களுடைய தெய்வத்திரு நதியான காவிரியின் தீதில்லாத சிறப்புகளும், பொய்யா வானம் புதுப்புனல் பொழிதலும் (மாதம் மும்மாரி), அந்த நாட்டின் ஆடல் பாடல்களின் பெருமைகளான அரங்கு ஆடல், துாக்கு, வரிப்பாடல் ஆகியவற்றின் சிறப்பியல்புகளும், பாரதி விருத்தியாகிய பதினோர் ஆடல்களும் அவைகளின் இயல்புகளும், தினைநிலை வரி, இனைநிலை வரி ஆகியவற்றின் இயல்புகளும், யாழின் தொகுதியும், ஈரேழ் சகோடமும், இடைநிலைப் பாலையும், தாரத்து ஆக்கமும், தான் தெரி பண்ணும், புகார் நகரின் பேரழகும் ஒளியுடைப் பாணியும் ஆகியவை அனைத்தையும் சேர்த்து இன்னும் பல பொருள்களையும் கருத்துகளையும் இனைத்துக் கூறப்பட்டுள்ளதையும், அவைகளின் பொதுத் தன்மைகளை யும் தனித் தன்மைகளையும் சேர்த்துக் கூறப்பட்டுள்ளதையும் புகார்க்காண்டத்தில் காண்கிறோம். அத்தகைய புகார்க் காண்டம் முற்றுப்பெறுகிறது. கட்டுரை முடிகிறது.