பக்கம்:சிலம்பின் கதை.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

சிலம்பின் கதை



யார் உயிர் தப்புவது என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும்; சிந்தித்துச் செயல் படுங்கள்” என்றான் அக் கொலைஞன்.

இறுதி அவலம்

சிந்திக்க அவர்களுக்கு நேரம் இல்லை; அச்சம் அவர்களை ஆட் கொண்டது; கோவலன் உயிரைத் துச்சம் என மதித்தனர். கல்லாத குடியன் முரடன் ஒருவன் தன் கைவாள் எடுத்தான்; அவன் வாழ்வை முடித்தான். மார்பில் குருதி கொட்டியது; மாநில மடந்தை துயர் அடைந்தாள்.

பாண்டியன் செங்கோல் வளைந்தது; கோவலன் தரையில் விழுந்தான்; இவற்றிற்கு எல்லாம் காரணம் அவன் பழைய வினைதான்; வேறு என்ன இருக்க முடியும்?

நல்வினையையே நாடிச் செயல் புரிந்தால் கேடு வருவது இல்லை. கண்ணகியின் கணவன் அவன் அவல முடிவு உலகுக்கு ஒரு படிப்பினையாகும்; அவன் பழம்பிறப்பில் செய்த தீவினை இப்பிறப்பில் அவன் வாழ்வினைப் பறித்துக்கொண்டது. அது மட்டுமா? வளையாத செங்கோலும் வளைந்தது; அதற்கு அப் பாண்டியன் செய்த பழவினையே காரணம் ஆகும்.


17. ஆய்ச்சியர் குரவை யாடுதல்
(ஆய்ச்சியர் குரவை)

இமயத்தில் மீன்கொடி ஏற்றியவன் பாண்டியன்; அவனை அடுத்துச் சோழர் புலிக்கொடியையும், சேரர் வில் கொடியையும் ஏற்றினர். தமிழர் வெற்றி நாவலந்தீவு முழுவதும் பரவியது. இப்பாரத நாடு முழுவதும் இவர்கள் ஏவல் கேட்டனர். இச்சிறப்புக்குக் கால்கோள் செய்தவர் பாண்டிய அரசர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/113&oldid=936430" இலிருந்து மீள்விக்கப்பட்டது