பக்கம்:சிலம்புத் தேன்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
6

சிலம்புத் தேன்

அது நம் அறிவை அள்ளும். மாநாய்கன், மாசாத்துவான், வயந்தமாலை, கோசிகமாணி, மாதரி, ஐயை, தேவந்தி, சாலினி, கோப்பெருந்தேவி, இருங்கோ வேண்மாள், அழும்பில் வேள், வில்லவன் கோதை, இவர்களே எல்லாம் நாம் சந்திக்கலாம். இவர்கள் வாழ்வும் வா லாறும் நம் சிந்தனையைத் தேனாக்கும். பொற்கொல்லன், கல்லாக்களிமகன், வம்பப்பாத்தர் ஆகிய இவர்களையும் நாம் சந்திக்கலாம். இவர்கள் சொல்லும் செயலும் நம் சிந்தனையைச் தீயாக்கும். மன்றங்களே, பூதங்களே, பல்வேறு தெய்வங்களைக் காணலாம்; அவை பேசும் பேச்சுக்களைக் கேட்கலாம்; கேட்டுச் சிலை போல மெய்ம்மறந்து நிற்கலாம்.

கல்லும் முள்ளும் நிறைந்த காட்டு வழியில் -நள்ளிரவில் - பால் நிலவில் - நடக்கலாம். 'மதுரை மூதுர் யாங்குளது?’ என்று கேட்ட வண்ணம் கால் அயர்ந்து மனம் அயர்ந்து நடக்கும் கண்ணகித் தெய்வத்தின் திருக்கரத்தை அன்போடும் ஆறாத் துயரோடும் தன் தோள் மேல் கிடத்தி 'உயிரினும் மானம் பெரிது’ என்று கொண்ட கொள்கை விடாது நடந்து செல்லும் காதற்கோவலனை எட்டியிருந்து காணலாம்; கண்டு கைபிசைந்து கண் பிசைந்து கலங்கு துயர் எய்தி மண் மகளுக்கு நம் கண்ணீரைக் காணிக்கையாக்கலாம்.

காடும் மேடும் கடந்த பின் நாடும் ஊரும் நம்மை வரவேற்கும். அங்கு 'நாளங்காடி'யில்