பக்கம்:சிலம்புத் தேன்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38 சிலம்புத் தேன்

எந்நாட் டாங்கண் இமய வரம்பனின்

நன்னாட் செய்த நாளணி வேள்வியில்

வந்தீ கென்றே"

(வரந்தரு காதை, 155.163)

வணங்கிய காட்சியையும், தமிழகத்தின் பெருங்குடி மக்களுள் ஒருத்தியாய்த் தோன்றிய தன் திருவடிகளே முடி சூடிய வேந்தரும் மக்களும் பணிந்து வணங்கி, தமிழகமும்-பாரதமும் உலகமும் பத்தினி வழிபாட்டால் ஒன்றுபட்டு உய்ய விழையும் காட்சியைக் கண்ணுற்ற கண்ணகித் தெய்வம், 'தந்தேன் வரம்' என்று குரல் கொடுத்த செய்தியையும் இளங்கோ அடிகள் நெய்போல இதயம் உருகிப்பாடும் பகுதிகள், 'பத்தினி வழிபாட்டால் உலகம் உய்யும், என்னும் ஒப்பற்ற குறிக்கோளையே உணர்த்து கின்றன அல்லவா?

இறுதியாக இன்னுமோர் உண்மையும் நாம் நினைவுகூர்தற்கு உரியது. இளங்கோ, தாம் செய்த அரிய இலக்கியத்திற்குச் சூட்டிய பெயரும், அவர் உள்ளத்தில் ஊறிக்கிடந்த இவ் வழிபாட்டுணர்வையே சுட்டிக் காட்டுகிறது.

'சிலப்பதிகாரம் என்று காவியத்திற்கு அவர் இட்ட பெயரிலேயே வழிபாட்டிற்குரிய தெய்வம் கண்ணகியே-அவள் காற்சிலம்பே என்னும் பொருள் புதைந்து கிடப்பது அறிந்து போற்றற்கு உரியது அன்றோ ?