பக்கம்:சிலம்புத் தேன்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்பின் புகழ் 41

சேர்ந்தவர். ஏறத்தாழ ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பு எழுந்த பெருங்காவியம் சிலப்பதிகாரம், உயிரும் உள்ளமும் உடலும் போன்றும், மன மொழி மெய் போன்றும், இயலும் இசையும் நாடகமும் ஒன்றுபட்டுத் தமிழினத்தின் கலைப் புகழைத் தரணியிலுள்ளோர் எல்லோரும் போற்றும்படி ஓங்கி உயர்ந்து விளங்கிய பொற்காலத்தில் பிறந்த வீரகாவியம் சிலப்பதிகாரம். அந்நாளில் இருந்த தமிழகத்தின் சிறப்பெல் லாம் கால வெள்ளத்திலே அழிந்துபோயிற்று. எனவே, தாம் வாழ்ந்த காலத்தின் தலை சிறந்த பிரதிநிதியாய்த் தோன்றி இளங்கோ அடிகள் யாத்த அப்பெருநூலுள் புதைந்து கிடக்கும் பல்வேறு உண்மைகள் பிற்காலத் தமிழர் கண்களுக்கு ஒளி மங்கியவையாகவே காணப் பட்டன. அந்நிலையில் இளங்கோ செய்த புண்ணியத்தால்-தமிழன்னை செய்த தவத்தால் தோன்றிய இருபெருஞ் சான்றோர்களே அரும்பத உரையாசிரியரும் அடியார்க்கு நல்லாரும்.

சிலப்பதிகாரத்திற்கு உரிய பழைய உரைகளாக இன்று நாம் காணக்கிடைப்பன அரும்பத உரையாசிரியர் உரையும் அடியார்க்கு நல்லார் உரையுமே. இவ்விரு உரைகளுள்ளும் அரும்பத உரையே அருமை சான்றது; அடியார்க்கு நல்லார் உரையினும் பழமையானது; பயன் செறிந்தது; ஆயினும், அவ்வரும்பத உரைக்கும் முன்னதாகச் சிலம்பிற்கு ஓர் உரை இருந்திருக்க வேண்டுமென்பது அரும்பத