பக்கம்:சிலம்புத் தேன்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44 சிலம்புத் தேன்

எண்ணும்போது, இவையனைத்தின் பெருமையும் விளங்கச் செய்த பெருமானாரல்லரா அரும்பத உரையாசிரியர்!’ என்று நினைந்து நல்லவர் நெஞ்சம் நெகிழும்.

அரும்பத உரையாசிரியரை அடுத்துச் சிலம்பின் ஒளி விளக்கிய சீர்மையாளர் அடியார்க்கு நல்லார். இலக்கிய அறிவும் இலக்கணப் புலமையும் கணித ஞானமும் சமய உணர்வும் மிக்க அடியார்க்கு நல்லார், சிலப்பதிகாரத்திற் சேர்ந்த பொருள் ஆருந்தெரிய விரித்த' தம் உரையால் சிலம்பின் புகழைச் செகமெலாம் போற்றச் செய்துள்ளார்.

சிலப்பதிகாரத்தில் இப்பெரியார் கொண்டிருந்த ஈடுபாடு இவர் பாடியருளிய அருமை சான்ற பாடலொன்றால் புலனாகின்றது .'

எழுத்தின் திறனறிந்தோ இன்சொற் பொருளின் அழுத்தத் தனிலொன் றறிந்தோ-முழுத்தும் பழுதற்ற முத்தமிழின் பாடற் குரையின் றெழுதத் துணிவதே யான்!” இத்தகு ஈடுபாடு கொண்டு சிலம்பிற்கு ஒளி செய்த இப்பெரியாரின் உரைநூலின் பல்வேறு பகுதிகள் இப்பொழுது கிடைக்கவில்லை என்றாலும், காலமெனும் கூற்றின் கொடுமையினின்றும் சிலம்பைத் தடுத்து அருள் செய்த இத்தமிழ்ப்பெருஞ் சான்றோரின் புகழ் என்றும் அழியாத தன்மை படைத்தது என்பதில் ஐயமில்லை.