பக்கம்:சிலம்பு பிறந்த கதை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5

அந்தப் புலவர்களோடு பழகி இன்புற வேண்டுமென்று மிக்க ஆர்வம் உண்டாயிற்று.

தந்தையிடம் விடை பெற்றுத் துணைக்குச் சிலரை அழைத்துக் கொண்டு பயணம் புறப்பட்டார் இளங்கோ. ஆரவாரமாகப் பல பேரைக் கூட்டிக் கொண்டு போக அவர் விரும்பவில்லை. தனியே தம் மனம்போனபடி போய், ஏழை பணக்காரர் என்று பாராமல் எல்லாரோடும் பழகவேண்டும் என்பது அவருடைய நோக்கம். தம்முடன் யாராவது வந்தால், “ இவர் சேர அரசர் பிள்ளை பெருநம்பி இளங்கோ” என்று போன இடங்களிலெல்லாம் சொல்வார்கள். அதைக் கேட்பவர்கள் மிகவும் மரியாதை செய்யத் தொடங்குவார்கள்; விலகி நிற்பார்கள். அவர்களோடு மனம் கலந்து பழகினால் தெரியவரும் பல செய்திகளை, அப்போது தெரிந்துகொள்ள முடியாது.

தனியே போய் வருகிறேன் என்று தன் இளம் புதல்வன் சொன்னதை நெடுஞ்சேரலாதன் ஏற்றுக் கொள்ளவில்லை. “இரண்டு மூன்று பேராவது உன்னுடன் துணைக்கும் ஏவல் செய்வதற்கும் இருக்க வேண்டும். தனியே போய்விட்டு, போன இடத்தில் விழிக்கக் கூடாது” என்று சொன்னான். வேறு வழியின்றிச் சில பேரை அழைத்துக்கொண்டு புறப்பட்டார் இளங்கோ.

முதலில் சோழ நாடு முழுவதையும் பார்த்தார். அங்கே உள்ள நிலவளத்தையும் நீர்வளத்தையும் கண்டு வியந்தார். காவிரி, மணமான மங்கை மெல்ல, நடந்து போவதுபோல, வெள்ளம் நிரம்பிப் போவ