பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

101



சீறியாழை எடுத்தணைத்து, குரல் குரலாக வரும் செம்பாலைப் பண்ணுடன், துத்தம் குரலாய படுமலைப் பாலையும் அவ்வழியே செவ்வழிப் பாலை முதலியனவும் அழகிய இனிய குறிஞ்சிப் பண்ணும் ஆகியவற்றை அகவல் (பாடும்) மகளிர் பாடியது விருந்தாக இனித்ததாம். இது செவி விருந்து.

சேரன் செங்குட்டுவன் தன் மனைவி வேண்மாளுடன் அரண்மனை நிலா முற்றத்தில் வீற்றிருந்த பொழுது, ஆடலில் வல்ல கூத்தச் சாக்கையன் என்பவன், கொட்டிச் சேதம் (கொடு கொட்டி) என்னும் கூத்தை ஆடி மகிழ்வித் தானாம். இந்தக் கூத்து சிவனால் ஆடப் பட்டதாம். சிவன் ஆடியதில் உள்ள சிறப்பாவது: சிவன் தன் இடப் பாகத்தே உமாதேவியை வைத்துக் கொண்டே ஆடினானாம். அங்ஙனம் ஆடியபோது, உமாதேவியின் காலணியும், தோளணியும் நடுங்க (அசைய) வில்லை - மேகலை ஒலி செய்யவில்லை. முலைகள் அசையவில்லை - காதணி குலுங்க வில்லை - கூந்தல் அவிழவில்லை - இத்தகைய திறமையுடன் சிவன் ஆடிய கூத்தை இங்கே சாக்கையன் ஆடினான்.

இதுகாறும் கூறப்பட்டுள்ள கலைகளைப் பற்றி ஆழ்ந்து எண்ணுங்கால் தலை சுற்றுகிறது. எந்தக் கலையிலும் திறமையில்லாத நிலையை நினைக்குங்கால் அச்சமும் நாணமும் போட்டி போடுகின்றன. இந்தக் கலை நுட்பங்களைப் புரிந்து கொள்வதே அரிதாயிருக்கையில் இவற்றில் திறமைக்கு இடமேது? இத்தகு கலை வல்லுநர்கள் சிலர் இன்றும் உள்ளனர். அவர்கள் போதிய அளவு சிறப்படையச் செய்ய வேண்டும். வயிற்றுப் பிழைப்பை மட்டும் கவனிப்பவர்கட்கும் பொருளிட்டும் பொறிகட்கும் (எந்திர மனிதர்கட்கும்) கலையாவது கத்தரிக்காயாவது? மேலும் புதிய கலைகளை ஆக்கி வளர்ப்பதோடு, பழைய் கலை களையும் அழிய விடாமல் போற்றிப் பேண வேண்டுவது மக்களின் கடமையாகும்.