பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

103



சேரன் செங்குட்டுவன் கொங்கர் செங்களத்திலே பகைவரை வென்று களவேள்வி செய்தான்; தாயைக் கங்கையில் நீராட்டச் சென்று எதிர்த்த படைகளை வென்றான்; தன் மைத்துனச் சோழனாகிய கிள்ளியைப் பங்காளிச் சோழர்கள் ஒன்பதின்மர் நேரி வாயில் என்னும் இடத்தில் எதிர்த்தபோது அவர்களை வென்று மைத்துனனுக்கு அரசு நிலைக்கச் செய்தான்; மோகூரில் பழையன் என்பவனின் காவல் மரமாகிய வேம்பை வெட்டி வெற்றி வாகை சூடினான்; வியலூரை வென்றான்; இடும்பில் என்னும் இடத்தில் கொடும்போர் புரிந்து பகைவரை வென்றான்.

மற்றும் செங்குட்டுவன், கனக விசயருடன் உத்தரன், விசித்திரன், உருத்திரன், பைரவன், சித்திரன், சிங்கன், தனுத்திரன், சிவேதன் என்னும் வடபுல வேந்தர்கள் சேர்ந்து கொண்டு பொர எழுந்தபோது, அவர்கள் அனைவரையும் வென்று வீழ்த்தினான்; கனக விசயரின் முடிமேல் கண்ணகிக்குச் சிலை செய்யும் கருங்கல்லை ஏற்றிச் சுமக்கச் செய்து கொண்டு வந்தான்.

இவ்வாறு மன்னர்கள் புரிந்த போர்களேயன்றி, சிவன், திருமால், முருகன், கொற்றவை ஆகியோர் புரிந்த போர்களும் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் குறிப்பிடப் பட்டுள்ளன.

ஒவ்வொரு போரையும் விரிப்பின் பெருகிப் பெருநூலாக விரியும்.