பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

202

சுந்தர சண்முகனார்


என்பது பாடல் பகுதி. பெரிய அளவில் பொருளுதவி கோவலன் புரிந்ததால், மாடலன் வாயிலாகச் ‘செல்லாச் செல்வன்’ என்று குறிப்பிடப் பட்டுள்ளான். அழியாத - குறையாத - செல்லாத பெரிய செல்வம், பின்னர்க் கோவலனை விட்டுச் சென்றுவிட, அவன் பிழைப்புக்காக மதுரை ஏகியது இரங்கத்தக்கதாகும். கொடைச் செயலால் புகழ் நிலைத்ததால், அப்புகழே செல்லாச் செல்வமாகும் என்றும் கருத்து கொள்ளலாம். ஈண்டு, ‘நத்தம் போல் கேடு’ (235) என்னும் திருக்குறள் பகுதி ஒப்பு நோக்கத்தக்கது.

இந்தப் பகுதியில் வடமொழி வாடை மிகுதியாக வீசுகிறது. வடமொழி வாசகம் எழுதிய ஏட்டை அப்பெண்ணிடமிருந்து கோவலன் பெற்றிருக்க வேண்டும். வேதம் வல்ல அந்தணர்கள் எழுதியுள்ள நூல்களில், இன்னின்ன அறச் செயல்கள் புரியின் கொலைப் பழி நீங்கும் என்று எழுதப்பட்டுள்ளபடி கோவலன் செயல்பட்டான்:

“ஒத்துடை அந்தணர் உரைநூல் கிடக்கையில்
தீத்திறம் புரிந்தோள் செய்துயர் நீங்கத்

தானம் செய்து அவள்தன் துயர்நீக்கி” (15:70-72)

என்பது பாடல் பகுதி. அந்தக் காலத்திலேயே ஆரியம் தென்னகத்தில் நிலைத்துவிட்டது என்பது தெரிகிறது.

இல்லோர் செம்மல்

கொடியவன் ஒருவன் ஒரு பெண்ணைக் கற்பு கெட்டவள் எனப் பொய்ச் சான்று புகன்று அவளுடைய கணவனை நம்பச் செய்து அவளது வாழ்க்கையைப் பாழ்படுத்தினான். இதை அறிந்த தெய்வப் பூதம் ஒன்று அவனைக் கொல்வதற்காகக் கைப்பற்றிக் கொண்டது. அதையறிந்த அவனது தாய் பூதத்திடம் ஓடி, என் உயிரை எடுத்துக் கொண்டு என்மகன் உயிரைக் காத்திடுக என வேண்டினாள். அப்பூதம் உடன்படாது அந்தத் தாய் எதிரிலேயே அவனை அடித்துக் கொன்றது.