பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

233


என்பது பாடல். சீதையைப் போலவே கண்ணகியும் மெல்லியளாக இருந்தாள். பெண்மைக்கும் சிறு பிள்ளைமைக்கும் இவ்வாறு வினவுவது இயல்பு.

கண்ணகியின் நடுக்கம்

ஒரு சோலையில் கவுந்தியடிகளுடன் கண்ணகியும் கோவலனும் அமர்ந்திருந்தபோது, தீயோன் ஒருவனும் பரத்தை ஒருத்தியும் அங்கு வந்தனர்; காமனும் இரதியும் போன்ற இவர்களைக் கண்டதும், இவர்கள் யார் எனக் கவுந்தியை வினவினர். இவர்கள் என் பிள்ளைகள் என்று கவுந்தி கூறினார். உடனே, அத்தீயோர், அண்ணனும் தங்கையும் அகமுடையானும் பெண்டாட்டியுமாய் இருப்பதுண்டோ எனக் கேட்டுக் குறும்புடன் கிண்டல் செய்தனர். இந்தத் தீய மொழியைக் கேட்டதும், கண்ணகி தன் காதுகளைப் பொத்திக்கொண்டு தன் கணவனாகிய கோவலன் முன்னே நடுங்கிக் கொண்டிருந்தாளாம். பாடல்:

“தீ மொழி கேட்டுச் செவியகம் புதைத்துக்

காதலன் முன்னர்க் கண்ணகி கடுங்க”

என்பது பாடல் பகுதி. தீய சொற்களைக் கேட்டால், அந்தோ எனக் காதைப் பொத்திக் கொள்வது உலகியல். இங்கே கண்ணகி செவி புதைத்தாள் என்று கூறவில்லை. செவியகம் புதைத்தாள் எனக் கூறப்பட்டுள்ளது. அகம் என்றால், உள்ளிடம். உள் காதை மூடிக் கொண்டாள் என்றால் காதை மிகவும் இறுக்கமாக முடிக்கொண்டாள் என்பது பொருள். மேலோடு மூடின், தீச் சொல் கேட்டாலும் கேட்டுவிடும் அல்லவா? மற்றும், பொத்தி என்று சொல்லவில்லை - ‘புதைத்து’ என்று சொல்லப்பட்டுள்ளது. அதாவது, ஒரு பொருளை மண்ணிற்குள் புதைத்து மறைப்பது போல், காதைமுற்றிலும் இறுக முடி மறைத்துக் கொண்டாளாம்.