பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24. மாதரியின் மாண்பு

கதையின் இடையில் - அடைக்கலக் காதையில் இளங்கோவால் மாதரி அறிமுகப்படுத்தப்பட் டுள்ளாள். அவள் ஆயர் குல மடந்தை. திருமாலைப் (கண்ணனைப்) போற்றுபவள். சிறு தெய்வ வழிபாடும் செய்பவள். அரண்மனைக்கு ஆப்பயன் அளிக்கும் உரிமையள். அவளுக்கு ஐயை என்னும் மகள் உண்டு.

கவுந்தியும் கோவலனும் கண்ணகியும் மதுரையின் புறஞ்சேரிப் பகுதியில் தங்கியிருந்தபோது, மாதரி அப்பக்கம் உள்ள இயக்கி என்னும் சிறு தெய்வத்திற்குப் பால் படையல் செய்துவிட்டுத் திரும்பிய வழியில், கவுந்தி அவளைக் கண்டு எண்ணுகிறாள். இவள் ஆயர் குலத்தினளாகத் தெரிகிறாள்; ஆ காத்து ஆப்பயனைப் பிறர்க்கு அளிக்கும் ஆயரின் வாழ்க்கையில் எந்தக் குற்றச் செயலும் இல்லை; எனவே, இவளும் ஒரு தீமையும் செய்யாள்; அகவை முதிர்ந்த பட்டறிவாளி (அனுபவசாலி ; இவளைப் பார்க்குங்கால், நேர்மையும் இரக்கமும் உடையவள்ாகத் தோன்றுகிறாள். எனவே, கண்ணகியை இவளிடம் அடைக்கலமாக விடுவது தகும் - என்றெல்லாம் கவுந்தி எண்ணலானார். பாடல்:

"புறஞ்சிறை முதுார்ப் பூங்கண் இயக்கிக்குப்
பால்மடை கொடுத்துப் பண்பின் பெயர்வோள்
ஆயர் முதுமகள் மாதரி என்போள்
கவுந்தி ஐயையைக் கண்டடி தொழலும்
ஆகாத்து ஓம்பி ஆப்பயன் அளிக்கும்
கோவலர் வாழ்க்கை ஓர் கொடும்பா டில்லை