பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

380

சுந்தர சண்முகனார்



இலக்கிய ஒப்புமை காண்டல் என்னும் முறையில் திருமூலரின் திருமந்திரப் பாடல் கருத்து ஒன்றை இவண் காண்பாம். மரத்தால் செய்யப்பெற்ற யானைப் பொம்மை ஒன்று உள்ளது என வைத்துக் கொள்வோம். அதை யானை என்று எண்ணினால் மரம் என்ற உணர்வு மறைந்துவிடும்; அதை மரம் என்று கருதினால் யானை என்ற உணர்வு மறைந்துவிடும் - என்பது அந்தக் கருத்து. பாடல்:

"மரத்தை மறைத்தது. மாமத யானை

மரத்தில் மறைந்தது மாமத யானை" (2290)

என்பது பாடல் பகுதி. நாயைக் கண்டால் கல்லைக் காணோம் - கல்லைக் கண்டால் நாயைக் காணோம் - என்னும் வழக்காறும் இன்னதே. சிலர் வீடுகளில், திருடர்களை ஏமாற்றக் கல்லால் ஆன நாய் உருவை முற்றத்தில் வைத்திருப்பதும் ஈண்டு எண்ணத்தக்கது.

ஒரு சிலம்பும் கையும்

வாயிலோன் பாண்டியனிடம் கண்ணகியின் வரவை அறிவித்தபோது, 'பொன்தொழில் சிலம்பு ஒன்று ஏந்திய கையள்' என்று கூறினான். இதிலுள்ள நயமாவது: காலில் அணிய வேண்டிய சிலம்பைக் கையில் வைத்திருக்கிறாள் - இரட்டைச் சிலம்புகளுள் ஒன்று மட்டுமே வைத்துள்ளாள் - என எதிர்மாறாக உள்ள நிலைமையைக் கூறியது உள்ளத் தைத் தொடுவது. (20:42)

சிலப்பதிகாரத்தில், அடிக்கு அடி ஆய்ந்து நோக்கின், சிறப்பான - எண்ணற்ற செய்திகளை இவ்வாறு காணலாம்.

கண்ணீர்ப் படை

சிலர் தம் தேவைகளை முடித்துக்கொள்ளக் கண்ணிரைப் படைக்கலமாகப் பயன்படுத்துவர். குழந்தைகட்கு இது இயற்கை அளித்த படைக்கலம். குடும்பப் பெண்கள் சிலரும்