பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

406

சுந்தர சண்முகனார்



காரணம்: முதல் நாள் கொலை நடந்ததால்தான் மறுநாள் ஆயர்பாடியில் தீய நிமித்தங்கள் தோன்றின.

மறுப்பு: தீய நிமித்தங்கள் தீமை நிகழ்வதற்கு முன்பே காணப்பட்டதாகவே பெரும்பாலான வரலாறுகள் கூறுகின்றன.

எனவே, முதல்நாள் மாலையே கோவலன் சென்று கொலையுண்டான் என்று வீரபத்திரன் கூறுவது பொருந்தாது.

அரும்பத உரைகாரரும் அடியார்க்கு நல்லார் என்னும் உரையாசிரியரும் மறுநாளே கொலை நடந்ததாகக் கூறியுள்ளனர். கொலைக்களக் காதையை இரண்டு நாள் செய்தியாக அடியார்க்கு நல்லார் பிரித்துக் கொள்கிறார். “நெடியாது அளிமின் நீரெனக் கூற” என்னும் 21-ஆம் அடிவரையும் முதல்நாள் பற்றியதாகவும், 22-ஆம் அடியிலிருந்து உள்ளவை இரண்டாம் நாள் பற்றியதாகவும் பிரித்துக் கொள்கிறார். 21 ஆம் அடியின் உரை முடிந்ததும் “இனி மற்றை நாளைச் செய்தி கூறுகின்றார்” என எழுதியுள்ளார்.

உணவு ஆக்குவதற்கு வேண்டிய பண்டங்களைக் கொடுங்கள் என்று ஆய்ச்சிப் பெண்களிடம் மாதரி கூறி விட்டு, நெய்யளந்து தர அரண்மனைக்குச் சென்றுவிட்டாள். ஆனால், ஆயப் பெண்கள் உடனடியாகத் தரவில்லை. மறுநாளே தந்தனர் என அடியார்க்கு நல்லார் கூறியுள்ளார்.

காலைவாய் - மாலைவாய்

உணவுப் பொருள்கள் இரண்டாம் நாள்தான் தரப்பட்டன என்னும் கருத்தை ஏற்றுக் கொள்ளாத வீரபத்திரன், அப்படியெனில் முதல் நாள் இரவு கோவலனும் கண்ணகியும் பட்டினி கிடந்தார்களா? இம் மாதிரி மாதரி விட்டிருப்பாளா? என வினவுகிறார். இவர் கூறும். இந்தக்கருத்து சரியே.