பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10. அழுகை (அவலச்) சுவை

தொல்காப்பியர் மெய்ப்பாட்டியலில் எட்டுவகை மெய்ப்பாடுகள் கூறியுள்ளார். அவற்றுள் அழுகையும் ஒன்று. அவலம் எனினும் அழுகை எனினும் ஒன்றே. அழுகை என்னும் மெய்ப்பாட்டுச் சுவை, இளிவு (இழிவு), இழவு, அசைவு, வறுமை என்னும் நான்கின் காரணமாகப் பிறக்கும் என்று கூறியுள்ளார்:

“இளிவே இழவே அசைவே வறுமை யென

விளிம்பில் கொள்கை அழுகை நான்கே” (5)

என்பது நூற்பா. இழவு அதாவது இழப்பு காரணமாக வரும் அழுகைச் சுவையை மட்டும் இங்கே எடுத்துக் கொள்ளலாம். சுவை என்பது இன்பத்தைக் குறிப்பது மட்டுமன்று; பல காரணங்களால் ஏற்படும் பலவகை உணர்ச்சிகளும் சுவை என்பதில் அடங்கும். சிலப்பதிகாரத்தில் அழுகைச் சுவைக்குக் குறைவே இல்லை.

நல வாழ்வு இழப்பு, இன்றியமையாப் பொருள் இழப்பு, உயிர் இழப்பு முதலிய பேரிழப்புகள் இழவில் அடங்கும். கண்ணகி முதலில் வாழ்விழந்தாள். இறுதியில் கணவனை இழந்தாள். பின்னர்க் கண்ணகியும் உயிர் நீத்தாள். இது தொடர்பாகப் பாண்டியன் நெடுஞ்செழியனும் கோப்பெருந்தேவியும் மாண்டனர். கோவலன் தந்தையும் கண்ணகியின் தந்தையும் இல்லற வாழ்வை இழந்து துறவு பூண்டனர். இருவரின் தாயர்களும் மக்கள் இழந்த துயர் பொறாது செத்தனர். கண்ணகிக்கு வழித்துணையாய் வந்த கவுந்தியடிகள் உண்ணா நோன்பு கொண்டும் அடைக்கலம் அளித்த மாதரி தீக்குளித்தும்