பக்கம்:சிவபிரான் கருணையுஞ் சீவர்கள் கடமையும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16


லும் இக்கடமையாகும். போர்வீரனொருவன் போர் முனையிற் சென்றவுடன் தனக்கு வரும் வெற்றி கருதி முற்படலும், தோல்வி கருதிப் பிற்படலுஞ் செய்யாது நிலைநின்று பொருதலும் அவன் கடமையாகும். அற நூல்களில் நித்தியகருமாநுட்டானங்களைப் பற்றிக் கூறி, அவற்றைச் செய்தலால் வரும் பயனையும் விரித்துப்பின், இப்பயன்களை யாராய்ந்தறிந்தே செய்தல் வேண்டுமென்று எவரும் கருதல் கூடாதெனவும், பிரதிதினமுஞ் செய்யவேண்டிய கன்மங்களைப் பயன் விசாரியாதே செய்து தீரவேண்டுமெனவும், அங்ஙனஞ் செய்தல் ஒவ்வொருவனுக்குங் கடமையாமெனவுங் கூறுதலு மீண்டுக் கருதற்பாலது. அறிவு வலிபடைத்தார் பயனை விசாரித்தன் மிக நன்றே. அஃதியலாதாயின், விசாரித்தறியும்வரை கன்மங்களைச் செய்யாதொழிதல் தவறென்பதே யீண்டுத் துணியற்பாலது. பயன், விசாரித்தலின்றிச் செய்யினும் செய்தாரைச் சார்தலொரு தலை. வரையாது கொடுக்கும் வள்ளன்மையுடையோர், இவற்கு இன்னது செய்தல் வேண்டும், இதற்கின்னது செய்தல் வேண்டும் என்னும் நியதியின்றி நேர்ந்த நேர்ந்தபடி கொடுத்ததற்குக் காரணம் அவருள்ளத்திற் பதிந்து கிடக்குங் கொடைக் கடமையேயாகும். இதுநோக்கியே, அவர் கொடைமடம் பட்டோரென்று கூறப்படுவர். முல்லைக்குத் தேரு மயிலுக்குப் போர்வையும் வேண்டாதனவாகவும், அப்பொருள்களினியற்கைத் தளர் நிலையைக் கண்டவுடன் மனநெகிழ்ந்து இரக்கமுற்று அவற்றிற்குப் பேரிடையூறு வந்ததாக‍க் கருதிப் பாரி முதலியோர் இயைபில்லாத் தேரும் போர்வையுமீந்தனரே. இவ்வீகை பயன் குறித்ததாமா? அவர் தமக்கு இயற்கையினமைந்து கிடக்குந் தண்ணளியோடு கூடிய கொடைக் கடமையேயன்றி வேறென் சொல்வது? முல்லைக்கொடி, படர்கொம்பின்றித் தளருமேல், தன் ஏவலாளரைக் கொண்டு தக்கதொரு கொழுகொம்பை நிறுத்தல் கூடாதா? அக்கொழு கொம்பினும் இத்தேரினா லக்கொடிக்குக் கிடைத்த விசேட நலம் யாதுளது? அங்ஙனமாகவும் தேரை யீந்ததற்குக் காரணம், பாரிவள்ளல் தேரேறி வருங்காற் கொடியின் றளர்நிலையைக் கண்டதும் தனது இயற்கைத் தண்ணளியால் இன்னது செயற்பாலதென்றுணரும் அத்துணையுந் தாழ்க்க மனமின்றி அக்கணமே தேரை நிறுவினார் என்பதே. இதனான‍ன்றே,