பக்கம்:சீதா கல்யாணம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24 சீதா கல்யாணம்

பெண்கள் தம் தோகையை விரித்து நடனம் ஆடு கின்றனர். செந்தாமரைகளாகிய மாதர் மலர்களாகிய மணி விளக்குகளை ஏந்துகின்றனர்.மேகங்கள் மத்தளம் கொட்டுகின்றன. வண்டுகள் பாடுகின்றன.நீல மலர்கள் கண் விழித்து நோக்குகின்றன. அருவியாகிய திரை, நாடக அரங்கத்திலே விடப்பட்டிருக்கிறது. இத்தகைய அழகுகளோடு கம்பீரமாகக் கொலு வீற்றிருக்கிறாள் கோசல நாட்டின் அதிதேவதை.

தண்டலை மயில்கள் ஆட, தாமரை விளக்கம் தாங்க, கொண்டல்கள் முழவின் ஏங்க, குவளை கண் விழித்து நோக்க தெள் திரை எழினி காட்ட, தேம் பிழி மகர யாழின், வண்டுகள் இனிது பாட, மருதம் வீற்றிருக்கும், மாதோ!

தண்டலை-சோலை, தெள்திரை-தெளிவானஅலை, எழினி-நாடகத்திரைச்சீலை) -

ஒரு நாட்டின் பெருமை யெல்லாம் அந்நாட்டி லுள்ள பெண்களைப் பொறுத்ததாகவே இருந்து வந்திருக்கிறது. கோசல நாட்டுப் பெண்களுக்கெல்லாம் செல்வமும் கல்வியும் ஒருங்கே அமைந்திருந்தன. தங்களிடம் வருந்தி வந்தவர் அனைவர்க்கும் அவள்கள் வேண்டியதையெல்லாம் அள்ளியள்ளிக் கொடுத் தார்கள். அவர்களது வீட்டிலோ, எப்பொழுதும் விருந்தினர்கள் வந்தவண்ணமும் போன வண்ணுமு மாகத்தான் இருக்கும். விருந்தோம்புதலைவிட அவர் களுக்குச் சிறந்த வேலை ஒன்றும் இருக்கவில்லை.

பெருந்தடம் கண் பிறை நுதலார்க்கு எலாம் பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால், வருந்தி வந்தவர்க்கு ஈதலும், வைகலும் விருந்தும் அன்றி விளைவன யாவையே?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீதா_கல்யாணம்.pdf/26&oldid=1367877" இலிருந்து மீள்விக்கப்பட்டது