பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

நெஞ்சைத் தடவி விட்டுக் கொண்டசுசீலா, “ஒண்னும் இல்லீங்க; பயப்பட்டிடாதீங்க, இருமினது நெஞ்சையெல்லாம் குடையுது. அவ்வளவுதான். டாக்டரைப் பார்க்கிறப்ப நல்ல டானிக்கா எழுதி வாங்கிச் சாப்பிட்டால் எல்லாம் சரியாகப் போயிடுங்க!” என்று தாழ்குரலெடுத்துச் சமாதானம் கூறினாள். தாலிச் சரட்டை நெருடிக் கொண்டிருந்தவளுக்கு, கணவன் கண்ணிரைத் துடைத்துக் கொண்டிருந்த காட்சி தெரிந்தது. அன்பான சிரிப்பை வரவழைத்துக் கொண்டு, “சின்னப்பிள்ளையா நீங்க? எதுக்குக் கண்கலங்குறிங்க இப்போ? நீங்க ஒரு சின்னப்பிள்ளைக்கு அப்பாவாக்கும்! டெலிவரின்னா அதுக்கு முன்னேயும் பின்னேயும் இப்படிச் சின்னச் சின்னத் தொந்தரவுகளும் பலவீனங்களும் உபாதைகளும் அவ்வப்போது ஏற்படுகிறது சகஜம்தானாம்!டாக்டரம்மா சொன்னங்க, அத்தான்!” என்றான். வந்த இருமலை வரவொட்டாமல் அடக்கிவிட்டாள்.

“சரி, சுசீ; நீ கொஞ்ச நாழிபேசாமல் இரு," என்றான் சுந்தர்: “சற்று நேரம் ரெஸ்ட் எடுத்துக்கலாமே!”

குழந்தை விழித்துக் கொண்டது; அத்துடன் நின்றால்தான் தேவலாமே!-அழுது வேறு வைத்தது.

துடிதுடித்தவளாக, எழுந்திருக்க முயற்சி செய்தாள் தாய்.

தந்தை முந்திக் கொண்டான்.

“பத்திரம், அத்தான்! ம்...அப்படித்தான்...ரெண்டு கையையும் கொடுத்துத் தூரக்கிக்கிடுங்க. மார்பிலே அணைச்சுக்கணும், அத்தான்!...அடடே, பிள்ளையாண்டானுக்கு உங்களை அப்பான்னு புரிஞ்சிருச்சு; அதான், மூத்திரத்தைப் பீச்சிஅடிக்கிறான்!” தவப்புதல்வனை மடியில் கிடத்திக் கொண்டதும், சுந்தரின் உதடுகளைத் துடைத்து விட்டாள் சுசிலா. “ஏங்க, இனிச்சுதில்ல!...நீங்க அதிர்ஷ்டக்காரங்கதான்! எனக்கு இதுமட்டும் அந்தப் பாக்கியம் கிடைக்கவில்லை!”