பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

21

வெடித்த சிரிப்போடு, மைத்துணியை நோக்கினான் அவன். வரும் நேரத்தில் திலகர் திடலில் பேசவிருந்த அமைச்சர் ஒருவரின் கம்பீரமான சுவரொட்டிப் படம் ஒன்றும் அவனது பார்வையில் கலந்தது; சுமதியைத் திரும்பிப் பார்த்தான்.

அவள் மெய்ம்மறந்த நிலையிலே, கூப்பிய கரங்களுடன் இன்னமும் நின்று கொண்டிருக்கிறாள்; கைக்கடிகாரத்தின் சதுர "பார்டர்" மின்னுகின்றது.

அப்படியெறால், அவனுடைய சிரிப்புக்குக் காரணமாக இருந்த அவளது பேச்சின் போக்கை அவள் உண்மையாகவே அறியவில்லையோ? மனம் ஒன்றிய பிரார்த்தனையில் அவளேயும் அறியாமலேயே ‘இல்லீங்க’, ‘ஆமாங்க’ என்ற சொற்கள் உதிர்ந்திருக்குமோ, என்னவோ?

“குமாருக்காகப் பிரார்த்தனை செய்தியா, சுமதி?”

“ஊஹூம்; என் பிள்ளைக்காக!”

“என்ன சொல்லுகிறாய்?”

“ஓ!...உங்க பிள்ளைக்காக; அக்கா பிள்ளைக்காகத்தான் பிரார்த்தனை செஞ்சேன், அத்தான்!”

அரைக் கணத்தில் அவன் உள்ளம் குலுங்கியது; உடலும் குலுங்கியது. “குழந்தை பேரிலே நீ வச்சிருக்கிற பாசத்தையும் அன்பையும் பார்த்தால், உன் அக்கா கையிலேருந்து குழந்தையை எங்கே நீ பறிச்சுக்கினு ஓடிப்போயிடுவியோன்னுகூட பயமாயிருக்குது, சுமதி!” என்று சொல்லிப்புன்னகை செய்தான் அவன்.

“நல்ல அத்தான்!” கேவிப் பேச்சைகேலியான பேச்சாக எடுத்துக் கொண்ட சரளம் இழைந்தது.

“சபாஷ்! நல்ல அத்தான்னு உன் அக்கா ஆஸ்ப்த்திரியிலே சர்டிபிகேட் கொடுத்தா, இப்ப நீ நடுவழியிலே கொடுத்திட்டே. அப்புறம் எனக்கு என்ன கவலை வேண்டிக் கிடக்குது?”