பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

சுமதிக்கும் பெருமைதான்!

ஹோட்டல் சொர்க்கமாம் அது.ஆனால் உள்ளே...?

செர்வர் ‘ஃபாமிலி ரூம்’ என்ற ஹைதர் காலத்திய அட்டைக் கிழிசல் ஒன்றைக் காண்பித்தான்.

“வெளியிலேயே அப்படி ஒரமாய் உட்கார்ந்திருக்கலாமா,சுமதி?”

“உள்ளேயே வேணுனாலும் போகலாமே அத்தான்!”

“நீ சொன்னால் சரிதான்!”

கதவுகள் கிறீச்சிட்டுச் சாத்திக் கொண்டன.

இரண்டு ஸ்பெஷல் மசாலாவுக்கு ‘ஆர்டர்’ கொடுக்கப்பட்டது.

“உன்னைப்பற்றி ஒண்ணுமே சொல்லக் காணோமே, சுமதி?”

“இதோ, சொல்கிறேன். நான் சுமதி. என் அக்கா ஊஹும், என் தெய்வம் சுசீலாவின் தங்கை நான். சொந்த ஊர்...” என்று இழுக்க ஆரம்பித்தாள் சுமதி. அதற்குள் பூஜைவேளையில் கரடியாக மசாலா தோசை பிளேட்டுகள் குறுக்கிடவே, பெரிய மனசு வைத்துப்பேச்சைத் துண்டித்தாள். வெகுநாழி அவள் பசியைப் பொறுத்துக் கொண்டிருந்தாள் என்பது தெரிந்தது; தோசையைக் கிள்ளி வாயில் திணித்துக் கொண்டாள். உருளைக்கிழங்கு மசாலாவில் மிளகாய் இருந்திருக்கும்: தண்ணீர் தேவைப்பட்டது. புன்னகை இல்லாத முகத்துடன் தண்ணிர் கொண்டுவந்து கொடுத்த அத்தானைப் பார்த்ததும், விஷயம் விளங்கியது; “அத்தானுக்குக் கோபம் போலே. நீங்களும் சாப்பிட்டுங்க; என்னேட லவ் ஸ்டோரியை நீங்க எதிர்பார்த்திருப்பீங்க; சொல்லிட்றேனுங்க,” என்று தெரிவித்தாள். டம்பப் பையிலும் அவளது கவனம் இழைந்திருந்தது.