பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

"இல்லாட்டா, மிஸ்டர் எமதர்மராஜன் என் அக்காகிட்டேயிருந்து லேசிலே தப்பிச்சுக்க முடியுங்களா அத்தான்?"

சுந்தர் உணர்ச்சிவசப்பட்டவனாகப் புன்னகை சிந்தினான்; "சத்தம் போட்டுப் பேசாதே; நீங்க அக்காவும் தங்கச்சியும் இப்படி ஒருயிரும் ரெண்டு உடலுமாய் இருக்கிற ரகசியம் அந்தயமதர்மனுக்குத் தெரிஞ்சிடப்போகுது!" என்றான்.

அத்தானைக் காட்டிலும் பலமாகச் சிரித்தாள் சுமதி: இப்போது அவள் குரலில் ஒரு தன்னம்பிக்கை விதியாகக் குரல் கொடுத்ததோ?-- "எங்க ரெண்டு பேரையும் எந்த எமனாலுமோ அல்லது தர்மனாலுமோ அல்லது ராஜனாலுமோ இந்தப் பிறப்பிலே பிரிக்கவே முடியாதுங்க! என்னை நம்புங்க, அத்தான்!” என்று உச்சாடனக் குரலில் கூறினாள்: நம்பிக்கை ஏலக்காய் மணமாகச் சிந்தியது!

"நீங்க இரண்டு பேரும் இன்று போல் என்றும் வாழ வேனும் என்கிறதுதானே என்னேட பிரார்த்தனையும்!"

"ரொம்ப நன்றிங்க, அத்தான். என் சுசீ அக்காவோட தங்கமனசு யாருக்கு வரும்? எனக்கு என் அக்காதான் கண் கண்ட தெய்வம்!... சுசீ வாய் திறந்து சொல்ல வேணும் என்கிறது இல்லை; வெறுமனே கை ஜாடை காட்டினால்கூட, அந்த அர்த்தத்தைப் புரிஞ்சுக்கிட்டு, அதையே வேதவாக்காக மதிச்சு, அக்கா கட்டளைப்படி நடப்பேன்! ஆமாங்க, அத்தான்!”

சாந்தநாதர் ஆலயம் கொடுத்து வைத்ததுதான்--- அதனால்தான், இரண்டாவது ஜோடிக் கும்பிடும் கிடைத்தது!...