பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூன்று


குழந்தை வீரிட்டது

விதி அந்தரங்கமாகவும், அதே வேளையில் பகிரங்கமாகவும் விளையாடிக்கொண்டும்; விளையாட்டுகாட்டிக் கொண்டும் இருக்கும் அதிசயமான இடம் ஆஸ்பத்திரி அல்லவா?

அந்திக்கன்னி சூடாற இளைப்பாறி, ஒப்பனை சேர்த்துப்பவனி புறப்படத் தயாராகிக் கொண்டிருக்கிறாள்.

உள்ளே இருந்தவர்களின் உற்றாரும் உறவினரும் வெளியே தவம் இருந்தார்கள்; அவர்களின் ஊர்பேர் தெரியாத பட்டியலிலே, ஊரும் பேரும் தெரிந்த சுந்தரும் சுமதியும் சேர்த்தி!---புதிதானகளையோடும், நூதனமான தெளிவோடும் பிற்பகல் இரண்டு நாற்பதுக் கெல்லாம் வந்தவர்களாக்கும்!

"ஒங்க சம்சாரத்துக்குக் கதம்பம் வாங்கிக் கொடுங்க, லார்!" என்று உபதேசம் நல்கிய பொடியன் ஒருவன் பூத்தட்டை சுமதியின் முதுகுக்கு நேர்வசமாக நீட்டினான்.

சுந்தர் நிமிர்ந்து, ஒரு தவிப்புடன் சுமதியை நிர்மலமாகப் பார்வையிட்டான். சுமதியின் நாணம் அவனுக்குக் குறும்புச்சிரிப்பை உண்டாக்கிற்று. மூச்சுக் காட்டாமல், ஐம்பது காசை நீட்டினான். சுமதியின் பின் அழகை ரசித்து.