பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

சுந்தருக்குத் 'திகீ'ரென்றது.' ஏன் இப்படி தந்தி கிந்தின்னு சுசீ பேத்துறாள்? சாதாரண லெட்டர் போட்டால் போதாதாக்கும்?' ஏனோ அவனது உள்மனம் கலவரம் அடைய ஆரம்பித்து விட்டது. "உன்னையும் குழந்தையையும் உங்க வீட்டிலே கொண்டு போய்ச் சேர்த் திட்டுத்தான் நான் சென்னைக்குத் திரும்பப் போறதாகச் சொல்லலையா, சுசீ?" என்று நினைவு படுத்தலானான்.

"ஓ, மறந்து போயிட்டேன். இன்னோரு சங்கதியையும் கேட்டுக்கிடுங்க!”

"ஊம்!"

"நீங்க என்னை விட்டுட்டு அங்கிட்டு இங்கிட்டு நகர்ந்திடாதீங்க, அத்தான்; உங்களைக் கண் கொட்டாமல் இன்னும் கொஞ்ச நாழிக்காச்சும் அப்படியே பார்த்துக்கிட்டே இருக்கவேணும்போலே ஒரு ஆசை அரிக்குதுங்க. காலம்பற இப்படி ஒரு ஆசை உங்களுக்குத் தோணலீங்களா? இப்ப எனக்குத் தோணுது. துளியத்தனை மனசுக்கு கடலத்தனை நப்பாசையான்னு சிந்திக்கிறீங்களா?”

சுந்தரின் இடது கண் மீண்டும் துடிக்கிறது. நீவி விட்டான்; மறுபடி, துடிப்புத் தொடர்கிறது. பன்னீர்ச் சிதறலாகச் சுடுநீர்ச் சரம்வேறு! எனக்குப்பயமா இருக்குது, சுசீ!" என்று தழுதழுக்கக் கூறியவன், விம்மத் தொடங்கினான்.

"அக்கா," என்று பதற்றத்தோடு கூப்பிட்டாள் சுமதி. சுசீயை விழுங்கிவிடுவதுபோலப் பார்த்தாள்.

"நெஞ்சை ஒளிச்சு ஒரு வஞ்சகமா, அத்தான்?... உள்ளதைச் சொன்னால், எதுக்குப் பயப்படனும்? எனக்குப் பயம் கியம் ஒண்னுமே இல்லையாக்கும். பிரசவ சமயத்திலே நான் பயப்பட்டது மெய்தான்; அத்தானை மறுபடியும் இந்த ஜன்மத்திலே காண முடியுமோ, என்னமோன்னு கதறி அழுது துடிச்சது பொய் இல்லேதான்!... சுமிக்குட்டி, நீ