பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

குடித்தான்; ஒரே வாய்தான்! திருப்பிக்கொடுத்து விட்டான்.

பாட்டி கலக்கிப்புகட்டிய நீர்க்கரைசலில் நிம்மதி பெற்று, பசி அடங்கி, உறங்கி விட்டான் ராஜா.

சுமதிக்குத் தன் பசி அடங்கின மாதிரி தோன்றியது. 'ராஜா!'--ராஜா, ராஜா என்று சுமதிக்குப் பழகிப் போய் விட்டது. அக்காவும் கூட இப்படியேதான் அழைத்தாக நினைவு. இவன் ராஜாவேதான்! அக்காளும் இந்தப்பெயரையே சூட்டி நிலைக்க வைக்க எண்ணியிருக்கக் கூடும். ஆனால், அத்தான்காரர் இஷ்டம் எப்படியோ? தலைச்சன் குழந்தைக்குத் தாய்வழிச் சொந்தத்தில்--அதாவது, தாய் வீட்டுப்பாட்டன்-பாட்டி பெயரைத்தான் வைப்பது நடை முறையாம்! அம்மா சொன்னார்கள்!

சுந்தரின் முகத்திரையில் புயல் அடங்கின அமைதி காணப்பட்டது.

அப்படித்தான் சுமதிக்குத்தோன்றியது."அத்தான்!"என்று கூப்பிட்டாள்; சுந்தர் 'ஊம்' கொட்டியதும், அவள் பேச்சைத் தொடர்ந்தாள்: "உங்க குழந்தைக்காகவேனும் நீங்க உங்க உடம்பைக்காப்பாற்றிக்கிட வேணுங்களா?.. நடக் கூடாதது நடந்து போச்சு ஆளு, நடக்க வேண்டியது இனி நடந்தாக வேணுங்களே? நான் சின்னஞ்சிறுசு; கோவிச்சுக்காதீங்க; தப்பு இருந்தா, நீங்கதானே என்னை மன்னிக்க வேணும்?--அக்காளா இருக்குது?’

கன்னத்தில் கை வைத்துக் கொண்ட சுந்தர், நெற்றிப் பொட்டு இரண்டையும் அழுத்திய போது, கையிலிருந்த கடிதம் விடுதலை அடைந்து சிதறிப்பறக்க ஆரம்பித்ததுஅதை எடுக்க முயன்றான்.

"நான் இல்லையா? நொடியிலே எடுத்துத் தரேன். நீங்க இருங்க!

"நானே எடுத்துக்கிறேன்!”