பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

89


கொடுக்கும்; பெண்ணாகப் பிறந்துவிட்ட எனக்கு அந்த வம்பெல்லாம் என்னதுக்கு?-மறுத்திட்டேன்! நானும் இல்லையல்லவா?-'சாமியே சரணம்' என்று அடங்கியும் ஒடுங்கியும் போயிருக்கலாம்!”

சாமியாரைக் குறித்துச் சுமதி குறிப்பிட்ட பேச்சைக் கேட்ட மாத்திரத்தில், சுந்தரின் உள் நெஞ்சில் பயம் குறுகுறுத்தது; இப்படிப்பட்ட வேண்டாத பழக்க வழக்கங்களில் குமார் வீணாக ஏன் மனசை அலையவிட வேண்டுமோ?-எது எப்படி இருந்தாலும், குமார் மீது சுந்தருக்கு ஒர் உயர்ந்த மதிப்பு என்றுமே உண்டு. முதற் சந்திப்பிலேயே குமார் தன் அன்பைக் கவர்ந்து விட்ட உண்மையையும் அவன் மறப்பதற்கில்லை! அவன் புறப்பட்டு வந்துவிட்டால், அவனிடம் அவன் சந்தித்தாக வேண்டிய எதிர்பாராத ஏமாற்றம் பற்றி எப்படி சொல்வதாம்? கண்ணா மூச்சி விளையாட்டு மறுபடி ஆரம்பமாகி விடுமோ, என்னவோ? முருகா!...ஆறுமுகப் பெருமானே!...

குழந்தை 'வீல்' என்று கத்துகிறது.

சுமதி விழுந்தடித்துக் கொண்டு ஒடினாள்.

காய்கறிப் பையுடன் தெய்வநாயகியும் திரும்பினாள்.

பயம் உடும்பாக நெஞ்சைக் கவ்வ, பின் கூடத்துக்கு விரைந்தான் ராஜாவின் தந்தை; மகன் சித்தியின் அரவணைப்பில் அடங்கிவிட்ட பழகிப்போன அதிசயத்தை இப்பொழுதும் வியந்து திரும்பினான். முன்னறிவிப்பு எதுவுமின்றிப் புயல் அடிக்கிறது; தென்றலும் வீசுகிறது. இருந்தாலும், புயலின்போது ஏற்படும் அதிர்ச்சி, தென்றல் கட்டத்திலும் மாறுவதில்லைதான். சே! வாழ்க்கையில் இப்படியொரு ஜீவமரணப் போராட்டமா? குழந்தையின் எதிர்காலத்தை பற்றிச் சிந்தித்தான் சுந்தர். அங்கே சுசீலாவும் சுமதியும் ரங்கராட்டினம் சுற்றிக் கொண்டிருந்தனர். கண்மணியின் கொள்ளைச் சிரிப்பை இந்நேரம் சுசீ கண்டால் உள்ளம் கொள்ளே போயிருப்பாள்!-ஆனால், இப்போது.....