பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

91

பெட்டியிலே கண்டேன். இதை இன்னம் ஏன் ஊறுகாய் போட்டு வச்சிருக்கே? கிழிச்சுப் போடுறதுதானே?” என்று ஆலோசனை வழங்கினாள்; “உன் அத்தான் கையிலே தப்பித் தவறிச் சிக்கிடப் போகுது!” என்றும் எச்சரித்தாள்.

அந்தக் கடிதத்தை அவள் ‘இனம்’ அறிந்தவள்தான். வாங்கினாள்; புரட்டினாள்; புலன் அடக்கம் சித்திக்கப் பெற்றவள் மாதிரி, அவள் சலனம் கடந்த நிலையில் காணப் பட்டாள்; சஞ்சலம் தாண்டிய கதியில் அவள் முகம் துல்லிதமாக விளங்கியது. திரும்பவும் ஒரு தரம்-ஒரேயொரு, தரம் அதைத் திருப்பிப் படிக்க வேண்டும்போலிருந்தது; செய்தாள்.

:“அன்புத் தெய்வமாம் சுசீ அக்காவுக்கு,

சுமதி எழுதிக் கொண்டது:

நானாக உன்னிடம் நேரில் சொல்ல எனக்குத் தைரியம் வரவில்லை; ஒருநாள் நீயாக என் வாயைக் கிண்டிக் கிளறி விட்டதால்தானே நான் என்னுடைய காதல் அந்தரங்கத்தை உன்னிடமே வெளியிட்டேன்! என்னுடன் பணிபுரியும் திருமிகு குமாரும் நானும் பரஸ்பரம் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு, காதலித்து வருகிறோம்; அந்தக் காதலுக்கு ஒரு வடிவமும் வனப்பும் நல்க, நாங்கள் இருவரும் கலியாணம் செய்து கொள்ளவும் முடிவு செய்திருக்கிறோம். இந்தக் காதலுக்கு அவர் தரப்பில் சோதிக்கவோ, சோதனை செய்யவோ அல்லது, தடை போடவோ யாருமில்லை. ஏன், தெரியுமா? அவர் நாதியில்லாத அனாதையாம்!

அக்கா! என் தரப்பிலே, நீ இந்தத் திருமணத்திற்கு ஒ. கே. சொல்லிவிட்டால், அதுதான் அம்மாவின் உதாரமான முடிவும் ஆகும். தமிழ்ப் பண்புடன் கூடியது எங்கள் நேசம்; மனமும் மனமும் கலந்திட்ட காதல் எங்களுடையது. எனவே, இந்தப் புனிதமான—புதியதான—புரட்சியான காதல் கலியாணத்திற்கு நீ நல்ல வாக்கும் நல்ல தீர்ப்பும் வழங்கி விடுவாய் என்பதை நான் மனப்பூர்வமாக அறிவேன்.