சி.பி.சிற்றரசு
9
காவல்களைப் போட்டுக் கண்காணிக்கச் செய்தான். துறைமுகங்கள் தவறாமல் உருவிய வாளோடு நின்றனர் வீரர்கள். எனினும் உடலின் எல்லா இரத்தக் குழாய்களிலும் விஷம் ஒரு வினாடியில் ஊடுருவிப் . பாய்வதைப் போல் சீனநாடு முழுதும் அபினி பரவி விட்டது. புராதனச் சீனம் இந்த பொல்லாத போதையிலாழ்ந்து விட்டது. யார் அதன் போதையைத் தெளிவிக்க வல்லவர்.
எதிரியாயிருந்து ரண - களத்தில் சந்தித்தால் , பிணப் பரிசையளிக்கலாம். வாளெடுத்தால் வீர மார்பைக் காட்டலாம். வேட்டு சத்தங்களென்றால் நாட்டில் அதன் எதிரொலியைக் கேட்கலாம். வெற்றியா, தோல்வியா? என்றால் இரண்டுக்கு மிடையேயுள்ள சமாதானத்தை நீட்டலாம். வீணாசையால் வீணர்கள் படையெடுக்கின்றார்கள் என்றால் வீரத்தைக் காட்டி விண்ணதிரப் போர் செய்து வீழ்ந்து மடியலாம். ஆனால், இருட்டில் வரும் திருடன் போல், நல்ல வார்த்தைகள் பேசிக்கொண்டே கெடுக்கும் நயவஞ்சகன் போல், வழிகாட்டுவதாக வஞ்சகமாக அழைத்துச்சென்று வழியில் கத்தியைக் காட்டும் கொலைகாரன் போல், நம்மையறியாமல் வரும் தூக்கம் போல், நாட்டில் வரும் கொள்ளை நோய் போல், காட்டாற்றின் வெள்ளம் போல், ஏதோ ஒரு தின்பண்டம் போல் உள்ளே நுழைந்து விட்ட அபினியைத் தடுக்க எந்த தடையுத்தரவாலும் முடியவில்லை .