பக்கம்:சீனத்தின் குரல்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

சீனத்தின் குரல்


போக்கு 'நானிருக்க அவனேன்' என்று தைரியமாக ஆண்கள் கேட்கமுடியவில்லை. அந்த அளவுக்கு பெண்களிடம் ஆண்கள் அடங்கியிருந்தார்கள், அல்லது அடக்கப்பட்டிருந்தார்கள். அந்த அளவுக்கு பெண்களின் கற்புக்கு விடுதலையும். ஆண்களின் நாவுக்குத் தளையும், நெஞ்சத்துக்குச் சிறை வாசமும் விதித்திருந்தார்கள் பெண்கள். ஆகவே அந்த ராணி பின் விருப்பப்படி ஒரு அழகனைத் தேடி ராணியாரின் படுக்கை அறையில் சேர்த்துவிட்டு தான் ஒரு காவலாளிபோல் வெளியே கைக்கட்டி நின்றுகொண்டிருந்தான், திருமணவிலக்கும், விதவைத் திருமணமும் வினாடிக்கு, வினாடி நடந்த வண்ணமிருந்தன.

வேண்டாத திருமண விலக்கும், விதவைத் திருமணமும் மறுமணமும் சமூக முன்னேற்றத்துக்கு மிகுந்த தேவைதான் என்றாலும் ஒரே நாளில் ஒருவன் மூன்று திருமண விலக்குகளும் நான்கு மறுமணமும் செய்துகொண்டிருந்தால் - முற்றிய காதல், தோன்றா விட்டாலும், குடும்பத்தில் கணவனுக்கும் மனைவிக்கும் ஏற்படவேண்டிய குறைந்த பட்ச அன்பும் இல்லாமல் போய்விடுமே. சாதாரண அன்பே பரிதியைக்கண்ட பனித்துளி யாகுமானால், கற்பு எந்தக் கடையில் விற்கிறது என்று கேட்கும் அளவுக்குத்தானே இருந்திருப்பார்கள் சீனப் பெண்கள். இதன் காரணமாக மக்களுக்கு இருக்க வேண்டிய ஒற்றுமை, அன்பு, குடும்ப பாசம் ஒன்றுமே இல்லாமல் போய்விட்டது.