பக்கம்:சீனத்தின் குரல்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி.பி.சிற்றரசு

21


இன்றைய சீன மக்களை எடுத்துக்கொண்டு அவர்கள் வம்சாவளியைப் பார்த்தாலும் சுமார் நாற்பது குடும்பங்களில் அடங்கிவிடுகின்றர்கள். எனினும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில், கண்ட கண்ட இடங்களில் வீசி எறிந்த களிமண் உருண்டைகள் போலிருந்தார்கள்.

முந்திய காலமும் பிந்திய காலமும்

கன்பூஷியஸ் காலத்துக்கு முந்திய சீனத்தையும், பிந்திய சீனத்தையும் எடுத்துக் கொண்டால் மலை போன்ற வித்தியாசங்கள் காணப்படுகின்றன. முந்திய சீனத்தில் பெண்களுக்கு எல்லா உரிமைகளும் இருந்தன. தாய்தான் குடும்பத்தின் தலைவி என்ற உரிமைக்குரியவளாயிருந்தாள். அப்படியிருந்ததின் காரணமாகவே, வெளிநாடுகளோடு தொடர்புகொள்வது, வாணிபஞ் செய்வது, போர் தொடுப்பது முதலானவைகளைச் செய்யச் சக்தியற்றவர்களாயிருந்தார்கள். இவ்வளவு பெரிய மக்கள் தொகை கொண்ட நாடு இந்த நிலையடையக் காரணமென்ன என ஆராய்ந்தான் கன்பூஷியஸ். தாய்மை! தாய்மை!, சாந்தம், சமாதானம், அமைதி என்ற தளர்ந்த சொற்களுக்கே சீனர்கள் அடிமைகளாய் விட்டனர். வீரம், போர்க்குணம், படையெடுப்பு, இரத்தஞ் சிந்தல் முதலான தீர செயல்களைத் தீண்டத்தகாதவையென விலக்கி விட்டார்கள். இந்த அடிமைத் தனத்தை ஒழிக்கவேண்டு மானால் பேத புத்தியை ஒழித்துக்கட்ட வேண்டும்.