பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/126

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
106 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை
 


தமிழக அரசியலில் அதுவரை, மூன்று பெண்மணிகள்தான் ஆட்சியாளராக இருந்து வந்துள்ளதை வரலாற்றில் காணமுடிகிறது. மதுரை நாயக்க மன்னர் முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கர் இறந்த பொழுது அவரது ஒரே மகனுக்கு வயது மூன்று மாதங்கள். ஆதலால் பாலகனது பாட்டியான ராணி மங்கம்மாள் மதுரைப் பேரரசின் ராணியாக கி.பி.1689 முதல் கி.பி.1706 வரை ஆட்சிப் பொறுப்பை ஏற்று இருந்தார்.[1] அடுத்து, கி.பி.1732-ல் மதுரை மன்னர் விஜயரங்க சொக்கநாத நாயக்கர் வாரிசு இல்லாமல் இறந்ததால் அவரது மனைவி ராணி மீனாட்சி அரசியாக கி.பி.1736 வரை ஆட்சி செய்தார்.[2]மறவர் சீமையின் மன்னர் செல்லமுத்து விஜயரகுநாத சேதுபதி கி.பி.1762-ல் வாரிசு இல்லாமல் இறந்த பொழுது அவரது தங்கை மகன் பதினோரு மாதங்கள் நிரம்பாத முத்துராமலிங்கம், சேதுபதியாக பிரகடனப்படுத்தப்பட்டு அவரது தாயார் முத்து திருவாயி நாச்சியார் கும்பெனியாரால் கி.பி.1772-ல் சிறைபிடிக்கப்படும் வரை சேதுபதி ராணியாக பதவியிலிருந்தார்.[3]

இந்த மூன்று பெண்மணிகளும் அரசுப் பணியில் இருந்த பொழுது அவர்கள் வெளிப்பகையை சமாளித்து வெற்றி காண்பதில் மட்டும் ஈடுபட்டு இருந்தனர். அப்பொழுது அவர்கள் பதவியில் இருந்ததால், அவர்களுக்கு அரசு அதிகாரம் செல்வாக்கு கை கொடுத்தன. ஆனால் ராணி வேலு நாச்சியாரது நிலை வித்தியாசமானது. ஏழு ஆண்டுகள் அந்நியச் சீமையான விருபாட்சியில் தன்னந்தனியாக இருந்து கொண்டு சிவகங்கைச் சீமையை மீட்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். கி.பி.1780-ல் உதவிப்படைக்கு தலைமை தாங்கி சிவகங்கையை மீட்டதுடன் சிவகங்கையின் ராணியாக ஆட்சி செய்த பொழுதும் அவர் பல பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியதாயிற்று. இவைகளுக்கு எல்லாம் மேலாக அவரது சாதனை, அவரை வீழ்த்துவதற்கு முயன்ற வெளிப்பகை உட்பகையை எதிர்த்து மோதியது. உள்ளத்துணிவையும் உயர்ந்த மறப் பண்பையும் உலகறியச் செய்த இந்த வீராங்கனையும் அவரது மகளும் முந்தைய சிவகங்கை மன்னர்களது வழியில், ஆன்மிகத்திலும் மிகவும் அக்கரை கொண்டிருந்ததை, அவர்கள் வழங்கியுள்ள சில அறக்கொடைகள் தெரிவிக்கின்றன.[4] அவைகளின் பட்டியல் பின் வருமாறு.


  1. Sathiyanatha Iyer. History of Madurai Nayaks (1928) P: 205-222
  2. Ibid - P: 232-233
  3. Military Despatches of England Vol. 7-4/20.6, 1772. P. 80-81
  4. சிவகங்கை சமஸ்தான பதிவேடுகள்