பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10. சிவகங்கை ஜமீன்தாரி

- ஒரு கண்ணோட்டம்
 

கி.பி.1728-ல் சேதுபதி சீமையில் இருந்து சிவகங்கைச் சீமை பிரிந்தது. மறவர் சீமையின் மகோன்னத வரலாறு படைத்த சேதுபதி மன்னர்களுக்கு ஏற்பட்ட மிகப் பெரிய பலவீனமாக இந்தப் பிரிவினை கருதப்பட்டது. இப்பொழுது, ஒரு தலைமுறைக்குப் பின்னர் சிவகங்கை மறவர்களது வீரமும் வரலாறும் மறக்கடிக்கப்பட, இவர்களது சீமையின் தன்னரக நிலை பறிக்கப்பட்டதுதான் சிவகங்கை ஜமீன்தாரி முறை. விடுதலைப் போராட்டத்தின் வெற்றிக்குப் பதிலாக விரைந்து வந்த இந்த ஆலகால விஷத்தை அரனார் உண்டது போல சிவகங்கைச் சீமை மக்கள் இந்த வெள்ளைப் பரங்கிகளது விஷத்தை அடுத்த 150 ஆண்டுகளுக்கு சகித்துக் கொள்ள வேண்டும் என்பது தான் காலத்தின் கட்டளை.

தமிழகத்தில் இந்த ஜமீன்தாரி முறை முதன்முறையாக சிவகங்கைச் சீமையில்தான் புகுத்தப்பட்டது. ஏற்கனவே, வடக்கே கும்பெனியாரது உரிமைபெற்ற வங்காளம், பீகார், ஒரிஸ்ஸா மாநிலங்களில் கும்பெனியின் தலைவர் காரன்வாலிஸினால் இம்முறை கி.பி.1797-ல் அமலுக்குக் கொண்டு வரப்பட்டது.[1] மன்னரது பாரம்பரிய ஆட்சி முறைக்கு பதிலாக 'நிலச்சுவான்தாருக்குக் கட்டுப்பட்ட குடிகள்' முறை இது. தங்களது உடைமையாக்கப்பட்ட தென்னாட்டுப் பகுதிகளிலும் இதனை உடனே அமுல்படுத்த வேண்டும் என்பதுதான் காரன்வாலிசின் ஆசை. ஆனால் அதற்கான சூழ்நிலை சுதேச மன்னர்கள், முந்தைய பாளையக்காரர்களது? பாளையங்களில் இருந்ததால், முதலில் சிவகங்கைச் சீமையில், கி.பி.1801-ல் ஜமீன்தாரியாக்கப்பட்டது.


  1. History of the Inam Revenue Settlement and Abolition of Intermediate Tenures (1977) Govt. of Tamil Nadu. P. 35