பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

220 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை

ஏமாற்றிக் கொள்வதுடன் மற்றவர்களையும் ஏமாற்ற முயல்வதும் ஆகும். இந்த ஆவணங்கள் இல்லையென்றால் நமது நாட்டில் பதினெட்டாவது நூற்றாண்டில் புயல்முகம் கொண்ட மக்கள் கிளர்ச்சிகளையும் அவைகளைத் தலைமை ஏற்று நடத்திய சித்திரங்குடி மயிலப்பன் சேர்வைக்காரர், மீனங்குடி கனகசபாபதித்தேவர், முத்துக் கருப்பத்தேவர், கொளத்துர்நாகராஜ மணியக்காரர், காடல்குடி கீர்த்தி வீர குஞ்சு நாயக்கர், ராஜசிங்கமங்கலம் குமாரத் தேவர், ஜகந்நாத ஐயன், கமுதி சிங்கன் செட்டி, பாஞ்சை கட்ட பொம்மு நாயக்கர், ஊமைத்துரை, இராமநாதபுரம் முத்து இராமலிங்க சேதுபதி, இன்னும் ஊர் பேர் தெரியாத தியாகிகளான எத்தனையோ ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னோடிகளை இனம் கண்டு இருக்க முடியாது. நாட்டுப்பற்றுடன் தியாகிகளான அந்த வீரத் தலைவர்களது நினைவிற்கு அஞ்சலி செலுத்த இயலாத, நன்றி உணர்வு இல்லாத மக்கள் என்று அல்லவா நம்மை எதிர்கால வரலாறு வசைமொழியும் நிலை ஏற்பட்டு இருக்கும்.

இப்பொழுது இந்த நூலாசிரியரது வரலாற்றுக்கு முரணான வரை வினைப் பார்ப்போம்.

பக்கம் 88

"மன்னர் முத்து வடுகநாதர் காளையார் கோவில் காட்டுக்கு வேட்டையாடச் சென்றார். பெரிய ராணி (வேலுநாச்சியார்) கர்ப்பிணியாக இருந்ததால் கொல்லங்குடியில் தங்கச் செய்து, மன்னரையும் இளைய ராணியையும் காளையார் கோவில் அனுப்பி வைத்தனர்."

பக்கம் 116

'திண்டுக்கல், விருபாட்சி செல்லும் பொழுது வெள்ளச்சி பிறக்கவே இல்லை'

சிவகங்கை கும்மி அம்மானைச் செய்திகளைப் பயன்படுத்தி இந்த நூலினை எழுதி உள்ள ஆசிரியர், இந்த நூலினுள்ளும் சொல்லாத செய்திகளை இப்படி திரித்துவிட்டு இருக்கிறாரே? அது எப்படி? ஒரு வேளை துர்க்காதாஸ் எஸ்.கே.சாமியின் கண்டுபிடிப்புகளை ஆதாரமாக கொண்டதாகவும் அடிக்குறிப்பு இல்லையே!

'கொல்லங்குடி தன்னில் பெரிய ராணி
குணமுடனே அங்கு இருந்து கொண்டாள்"

(பக்கம் 117)

என்று மட்டும்தான் அம்மானை குறிப்பிடுகிறது. அவர் கர்ப்பிணியாக இருந்த விவரம் அம்மானையில் எங்கும் இல்லை. அதைப் போல