பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 13


மதுரையைக் கடந்தவுடன் கிழக்கு நோக்கி சேதுநாட்டை ஊடறுத்துச் செல்லும் வைகையின் தென்கரை வட கரையை ஒட்டி கிழக்கே எமனேஸ்வரம் வரையிலான பகுதி புதிய நாட்டின் தெற்கு எல்லையாகக் கொண்டு, பின்னர் வடக்கு நோக்கி சென்று பிரான்மலையில் கிழக்குச் சரிவு வடக்கு எல்லையாக நிர்ணயிக்கப்பட்டது. இதில் அடங்கிய பகுதி சேதுநாட்டின் பரப்பில் சரிபாதி பகுதியாக இல்லாவிட்டாலும் ஐந்தில் இரண்டு பங்கிற்கும் அதிகமான நிலப்பரப்பாக அமைந்து இருந்தது. நில அளவை முறையும் அதற்கான வசதியும் இல்லாத காலம் அது. ஆதலால் இந்த புதிய சீமையினை, பழைய சேதுபதி சீமையின் ஐந்தில் இரண்டு பங்கு என்றும், பழைய இராமநாதபுரம் சீமை ஐந்தில் மூன்று பங்கு என்றும் பொதுவாக சொல்லப்பட்டது. இது நிகழ்ந்தது கி.பி.1728-ல்.