பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2. சீமையாளும் உரிமை
சசிவர்ணருக்கே

ற்கனவே வழக்கிலிருந்த சேதுபதி சீமை, பெரிய மறவர் சீமை என்றும் புதிய சீமை, சின்ன மறவர் சீமை என்றும் வரலாற்று ஆசிரியர்களால் குறிக்கப்பெற்றது. மேலும் இந்த புதிய சீமையின் அங்கங்களாக மான வீர மதுரை, திருப்புவனம், படைமாத்தூர், பாகனேரி சக்கந்தி, நாலுகோட்டை மல்லாக்கோட்டை, பட்டமங்கலம், அரளிக்கோட்டை, சத்துரு சங்கார கோட்டை, திருப்பத்துர், பாலையூர், எழுவன்கோட்டை, இரவிசேரி, தென்னாலைக் கோட்டை, காளையார் கோவில், ஆகிய பாளையங்கள் இருந்தன. இந்த பாளையங்களுக்கு தலைமை இடமாக ஒரு புதிய ஊரும் நிர்மாணிக்கப்பெற்றது. அதுதான் இன்றைய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மாவட்டத்தின் தலைநகரான சிவகங்கை ஆகும்.

ஏறத்தாழ முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் காடாக இருந்த இந்த பகுதியில் சிவகங்கை நகர் அமைந்ததற்கான கதை ஒன்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. நாலுகோட்டையிலிருந்து சசிவர்ணத் தேவர் ஒருநாள் இந்த காட்டுப்பகுதிக்குள் வந்தபொழுது ஒரு தவசீலர் தியானத்தில் இருப்பதைக் கண்டு அவரை தரிசிக்க அருகில் சென்றார். அப்பொழுது அங்கு தவசிக்கு பதில் ஒரு பெரிய வேங்கை காணப்பட்டதாகவும், அதனை கண்டு அஞ்சாமல் அந்த தவச்செல்வரைத் தேடிய பொழுது வேங்கை மறைந்து முனிவர் தென்பட்டதாகவும் அவர் சசிவர்ணத் தேவருக்கு ஆசிகள் வழங்கியதாகவும் அவரது வேண்டுகோளின்படி அங்கு ஒரு ஊரணி தோற்றுவிக்கப்பட்டது என்பது அந்தக் கதை. இதே கதை இன்னும் மாறுதல்களுடன் சில பகுதிகளில் வழக்கில் உள்ளன.