பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காந்தருவ தத்தை இலம்பகம்63



இருந்த தன் தம்பி நபுலனிடமிருந்து புதிய நரம்பைவாங்கி அதில் மாட்டினான். அவன் இசை ஞானம் அறிந்தவன் என்பதை இச் செயல் எடுத்துக் காட்டியது.

யாழ் எடுத்து இசை கூட்டினான். காதற் பாட்டுப் பாடுவது என்று தொடங்கினான். அதுவே அவள் நெஞ்சைத் தொடும் என்பதை அறிந்தான். பெரியவர்கள் தெய்வீகப் பாடல்களை விரும்பலாம்; இளைஞர்கள் காதற் பாட்டைத் தான் விரும்புவார்கள் என்பதை அவன் அறிந்தவன், பிரிவால் வாடும் காதலியின் நெஞ்சைச் சித்திரித்து அவள் நெஞ்சம் நெகிழப் பாடினான்.

கூட்டத்திலிருந்து கைதட்டல் கிளம்பியது. இவன் இசையில் இளவரசன் என்று புகழ்ந்தனர். இளையராஜா வாழ்க என்று வாழ்த்தினர்.

அடுத்து அவள் பாடும் முறை வந்தது. அவளும் அவனுக்கு நிகராக இளவேனிற்பருவம் குறித்துப் பாடினாள். அவன் பாடல் கார் காலத்துத் தலைவியின் மன நிலையைச் சித்திரித்தது. அது பிரிவைக் காட்டியது இவள் பாடல் இளவேனிற் பருவத்தில் கூடி மகிழும் இனிய காட்சியைக் கொண்டு வந்து நிறுத்தியது. ஒசையை விட்டுப் பொருளில் ஆழ்ந்தாள்.

அவள் மனம் சிதைந்தது; ஒரு முகமாக அவளால் மனத்தை நிறுத்த முடியவில்லை; காதல் உணர்வு மிக்கு அவளை அலைக் கழித்தது; நாணம் அவளைக் கை விட்டது; நிறை கரை புரண்டது; யாழை நெகிழ்ந்து கீழே விட்டாள், அவன் தோளில் சாய்ந்து தன் வசம் இழந்தாள். ஊடலில் தோற்பவர் கூடலில் வெற்றி பெறுவது போல இசையில் தோற்றவள் காதலில் வெற்றி பெற்றாள்.

பட்டுப் போன்ற அவள் மேனி தன் தோள்களில் பட்டதும் அவனுக்கு ஒரு புது வகைக் கிளர்ச்சி ஏற்பட்டது. போரில் தினவு கண்ட அவன் தோள்கள் காதலில் விறு