பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70சீவக சிந்தாமணி



பேசினாள். தான் கைப்பட சமைத்த சமையல் என்று பெருமை பேசும் இல்லத்து அரசிகள் போல அவள் இது தன் கைப்பட அமைத்த சுண்ணம் என்று அதன் வண்ணத்தைப் பாராட்டினாள். அதனால் தன் கைத் திறனையும், கலைத்திறனையும், சுவைத்திறனையும், அழகின் உணர்வினையும் அதிகப்படுத்திப் பேசினாள்; மயில் கருடன் கதையாயிற்று.

‘நீ நாட்டுப்புறத்துப் பெண்; நாகரிகம் அறியாத கட்டுப் பெட்டி, உனக்கு என்ன தெரியும் அழகியல்பற்றி. இந்தச் சுண்ணத்தைக் கொண்டு நீ யாரையாவது உன் பக்கம் இழுக்க முடியுமா, இதை வைத்து நீ ஒரு ஆடவனைக் கவர்ந்து விட்டால் உனக்கு நான் தோற்றவள் ஆவேன். இது நான் இடித்த சுண்ணம்; இதையும் அதையும் வைத்து அனுப்புவோம்; யார் எதற்கு அடிமையாகின்றனர் பார்ப்போம்” என்றாள் சுரமஞ்சரி.

தோழியர் தடுத்துப் பார்த்தனர்; சூது ஆட்டம் இது; நாம் பூசிக் கொள்ளும் அழகுச் சாதனை இது; இதை வைத்தே சூதாடுவது தீது. இதனால் பகை வளரும்; உம் நகை கெடும்; இது உங்களுக்கு மிகை” என்று வகையாக எடுத்துக் காட்டினர்.

“முடியாது; இரண்டையும் தனித்தனித் தட்டுகளில் எடுத்துச் செல்லுங்கள்; வழியில் தட்டுப்படுகின்ற கட்டிளங் காளைகளிடம் காட்டுங்கள்; அவர்கள் தீர்ப்புக் கூறட்டும்; எது உயர்ந்தது என்று. உரைக்கட்டும்” என்றனர்.

ஒட்டு என்று வைத்தவர் அதற்கு ஈடாகப் பணயமும் வைத்தனர்; “தோற்றவர் இவ் அருவியில் நீராடுதல் கூடாது; கோடிப் பொன் கொட்டி அளந்து அருகன் கோயிலுக்குத் தரவேண்டும்” என்றாள் சுரமஞ்சரி; அதனைக் குணமாலை மறுக்கவில்லை.