பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குணமாலையார் இலம்பகம்93


அவர்கள் விருப்பப்படி விட்டால் அங்கே கொண்டு போய் முட்டிக்கு முட்டி அடித்துப் பல்லைத் தட்டிக் கையில் கொடுப்பது உறுதி. மறுபடியும் ஒரு கோவலன் கதை நடக்காது என்பதற்கு உத்தரவாதமும் இல்லாமல் இருந்தது.

வெட்டுண்ட உடலை எடுத்துவைத்துத் தத்தையும் குணமாலையும் வந்து அழுது கொண்டிருக்க வேண்டியது தான். தலைமாட்டில் ஒருத்தி, கால்மாட்டில் மற்றொருத்தி, இந்த அநாகரிகத்தைத் தடுக்க அவன் யோசித்துத் தீர வேண்டியது ஆயிற்று.

அக்கம் பக்கம் கூட்டம் வந்து கூடிவிட்டது. பல திறப்பட்ட மக்கள் அங்கு வந்து கூடிவிட்டனர். அவர்களுக்கு இது காணத்தக்க காட்சியாக இருந்தது. இப்பொழுதுதான் திருமணம் ஆயிற்று; புதுமாப்பிள்ளை அவனைக் காவலர் வந்து இழுத்துப் போகிறார்கள் என்றால் அந்தக் காட்சியை மறுபடியும் காணமுடியாது. மேலும் சீவகன் ஊரறிந்த பிள்ளை; தத்தையோடு பாடி வெற்றி கண்டவன்; யாருக்காவது ஏதாவது கெடுதி என்றால் ஓடோடி வருவான். அவன் அந்தத் தெருவுக்கே ஒரு அரண் போல இருந்தான். நந்தகோனின் மாடுகளைப் பிடித்துக் கொண்டு வந்து சேர்த்தவன்; கள்வர் என்றால் அந்தப் பக்கம் வரவே அஞ்சுவர்; எப்பொழுதும் அவனைச் சுற்றிக் காளையர் சூழ்ந்து கொண்டிருப்பர். சில சமயம் அவன் பேட்டை ரவுடியாகத் தென்பட்டான். பெண்ணைப் பெற்றவர்களுக்கு அவன் மீது ஒரு கண் இருக்கத்தான் செய்கிறது. இந்தப் பிஞ்சு உள்ளங்கள், அவனிடம் மனம் பறி கொடுத்துவிட்டுச் சரியாகவே துரங்குவது இல்லை. இவனை உள்ளே தள்ளிவிட்டால் நிம்மதியாகவும் இருக்கலாம் என்று எண்ணியவர்கள் உண்டு; பொது மக்கள் என்பவர்களே ஒரு கலவை இனம்; இப்படியும் இருப்பார்கள்; அப்படியும் இருப்பார்கள். அது மாதிரி கூட்டம் அது.