பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/97

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குணமாலையார் இலம்பகம்95“ஒருத்தி யானையின் பிடியில் அகப்பட்டுக் கொண்டு உயிருக்குப் போராடுகிறாள். பேடிகளைப் போல மற்றவர்கள் வேடிக்கை பார்க்கிறார்கள்; அப்பொழுது ஒர் இளைஞன் தன் உயிரைப் பணயம் வைத்து அவளைக் காக்கின்றான் என்றால் அவனைப் பாராட்டுவதைவிட்டுத் தளைப்படுத்துவது அநீதி, அக்கிரமம், அட்டுழியம்” என்று கத்தினாள்.

இவள் தான் “ஆடவர் இல்லையோ” என்று முன்குரல் கொடுத்தது, சீவகனைக் காப்பாற்றத் தூண்டியவள்; கோயில் மணிபோல் அவள் ஒலி கணிர் என்று கேட்டது. பக்த கோடிகள் பஜனை செய்வதை விட்டு அவளையே உற்று நோக்கினர்;

“அவள் சொல்வதும் நியாயமாகத் தெரிகிறதே” என்று சுருதிக் கட்டை மாற்றிப் போட்டனர்.

“அதுதான் உண்மை; இவனை அரசர் பாராட்டிப் பரிசுதரவே அழைக்கிறார்” என்று அவர்களுக்கு மாற்றுக் குரலில் பேசினர் காவலாளிகள்.

தத்தை அமைதியாக இருக்கவில்லை. இவர்கள் சூழ்ச்சியை அறிந்தவளாய் இவனை மீட்பது என்று முடிவு செய்தாள். எனினும் அது அவன் ஆண்மைக்கு இழுக்கு என்று அடங்கிவிட்டாள்.

சீதை அனுமனிடம் கூறினாள் “இராவணனை என் சொல்லினால் சுட முடியும்; அது இராமன் வில்லுக்கு மாசு: அதனால்தான் பொறுத்துக் கொண்டிருக்கிறேன்” என்றாள்.

அதே போன்ற நிலையில்தான் தத்தை அகப்பட்டாள். அவள் அவசரப்படவில்லை. அவன் தோழர்கள் இவன் ஆணைக்காகக் காத்துக் கொண்டிருந்தனர். தப்பிச் செல்லத் தன் தோழர் துணை வேண்டாம் என்று கருதினான்; அதுபெரும் போரில் கொண்டு சென்று விடும்.