பக்கம்:சுந்தர காண்டச் சூறாவளி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சூறாவளி

13


புறப்பாட்டும் அது. இராமன் இலங்கை கொள்வதன் முன் வீடணற்குக் கொடுத்த துறையும் அது -

என்று இலக்கிய மேற்கோள்களுடன் உரையெழுதி யுள்ளார். புறப்பாட்டு என்பது புறநானூறு. அவர் காட்டியுள்ள கழிந்தது பொழிந்தென (203) என்று தொடங்கும் புறநானூற்றுப் பாடல், 'சேரமான் பாமுளுர் எறிந்த நெய்தலங் கானல் இளஞ்சேட் சென்னி' என்னும் சோழ மன்னனைப் பற்றி, ஊன்பொதி பசுங்குடையார் என்னும் புலவர் பாடியது.

பகைவருடைய கோட்டை அவரிடம் இருக்கும்போதேஅதை நீ வெல்வதற்கு முன்பே, பாணர்க்குப் பரிசாகக் கொடுக்கும் வள்ளன்மை உடையவன் நீ என்று புலவர் சோழனை நோக்கிக் கூறியுள்ளார். "ஒன்னார் ஆரெயில் அவர்கட் டாகவும் நுமதெனப் பாண்கடன் இறுக்கும் வள்ளியோய்" (203:9-11) என்பது பாடல் பகுதி. அடுத்து, ஆனா ஈகை அடுபோர் (42) என்று தொடங்கும் புறநானூற்றுப் பாடல், சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனைக் கோவூர் கிழார் பாடியது:

சோழ மன்னா! புலவர்கள் உதவி வேண்டி உன்னை நோக்கினர். நீயோ (அவர்கட்குக் கொடுத்து விட்டதான பொருளில்) சேரர் நாட்டையும் பாண்டியர் நாட்டையும் நோக்கினாய்' - என்று புலவர் கூறியுள்ளார்.

"புலவரெல்லாம் நின்நோக் கினரே, நீயே, மாற்றிரு வேந்தர் மண்ணோக் கினையே" (42) என்பது பாடல் பகுதி. மற்றும், மாங்குடி மருதனார் பாடிய மதுரைக் காஞ்சி என்னும் நூலில் உள்ள,