பக்கம்:சுந்தர காண்டச் சூறாவளி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சூறாவளி 15

சூறாவளி

ஐயோ, திருடர்கள் இவ்வாறு கொடுமை செய்கிறார்களே, என்பது பொருளாகும். இத்தகைய நையாண்டித்தனம் (Satire) இரண்டை மதிப்புரையாளர்க்காக இங்கே தருகிறேன். கற்றவர்கட்கு யாதும் நாடு - யாதும் ஊரே, அங்ஙனம் இருக்க, சாகும் வரையில் கற்காததற்குக் காரணம் என்ன? என்னும் பொருளில் உள்ள, "யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையும் கல்லாத வாறு" (397) என்னும் குறளின் அடிப்படையில் யான் ஒருவகைக் கிண்டல் (Satire) செய்வதுண்டு, அதாவது, சாகும்வரை படிக்க வேண்டும் என்று வள்ளுவனார் கூறியிருப்பதனால்தான் மாணாக்கர் சிலர் ஒவ்வொரு வகுப்பிலும்-ஒவ்வொரு தேர்விலும் இரண்டு - மூன்று ஆண்டுகள் தொடர்ந்து தோல்வியுறுகிறார்கள் போலும்' - என்று யான் வகுப்பிலும், சொற்பொழிவுகளிலும் கிண்டலாகப் பேசுவதுண்டு. கேட்பவர்கள், இந்தக் கிண்டலைப் புரிந்துகொண்டு சுவைத்துச் சிரிப்பர். தோல்வி அடைந்துகொண்டே யிருக்கவேண்டும் என யான் உண்மையாகச் சொன்னதாகவா இதற்குப் பொருள்? இது யான் பேசிய கிண்டல், யான் கேட்ட கிண்டல் ஒன்று வருமாறு: சில்லாண்டுகட்கு முன், சென்னை - தேனாம் பேட்டையில் ஒரு பேருந்து நிறுத்தத்தில் (Stopping) நின்று கொண்டிருந்தேன். இருவர் உரையாடிக் கொண்டிருந்தனர். ஒருவர், கள்ளநோட்டு அச்சடிப்பவர்களைக் கண்டித்துத் திட்டிக் கொண்டிருந்தார். மற்றொருவர் சொன்னார்; எல்லாவற்றிற்கும் மக்கள் அரசாங்கத்தையே எதிர்பார்த்திருக்கக் கூடாது-தாங்களும் முயன்று பாடுபட வேண்டும் என்று சொல்லப்படுகிறதே - அதனால்தான்