பக்கம்:சுந்தர காண்டச் சூறாவளி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

சுந்தரகாண்டச்

அவர்கள் தாங்களே கள்ளநோட்டு அடித்துக் கொள்கிறார்கள் போலும்" என்று கூறினார். இதை அனைவரும் சுவைத்துக் கேட்டுச் சிரித்தனர். இது ஒரு கிண்டல் - நையாண்டித்தனம் - Satire. எனவே, கள்ளநோட்டு அடிப்பது சரியானதுதான் என்று சொல்வதாக இதற்குப் பொருள் இல்லை. யான் எழுதியிருப்பதும் இது போன்றதே. பைத்தியம் பிடித்த தமிழாசிரியன் கூடத் திருடுவதற்குத் தொல்காப்பியமும் கழக இலக்கியங்களும் துணை செய்வதாகக் கூறமாட்டான். இந்தக் கிண்டலைக் கூட - இந்த நையாண்டித்தனத்தைக் கூடப் புரிந்துகொள்ள முடியாத ஏதோ ஒரு பச்சிளங் குழந்தை நூல் மதிப்புரை செய்வது வியப்பிற்கும் வேதனைக்கும் உரியதாகும். இந்தக் குழந்தைக் கை என் பட்டங்களைக் குறிப்பிட்டு என்னை மட்டப் படுத்தியிருக்கிறது. என்ன கொடுமை!

மொழி நடை:

என் சொல்லாட்சிகளையும் மொழி நடையையும் மட்டமான மதிப்புரையாளர் மிகவும் மட்டமான சொற்களால் மட்டப் படுத்தியுள்ளார். பேரறிஞர் டாக்டர் அ. சிதம்பரநாதன் (A.C. செட்டியார்) அவர்கள், எனது 'வீடும் விளக்கும்' என்னும் நூலுக்குத் தந்துள்ள மதிப்புரையிலிருந்து, எனது மொழிநடை பற்றிய பகுதியை இவண் தருகிறேன்:

"இந்நூலாசிரியர் வரைந்துள்ள தமிழ்நடை மிக்க எளிமையும் இனிமையும் வாய்ந்து பிழையில்லாமல் இருப்பது மனத்திற்கு மகிழ்ச்சி தருகின்றது. கிடைத்தற்கரிய மணி பெற்றால் அதைப் பொன்னிடை வைத்துப் பதித்து அணி செய்வது அறிவுடைய மக்கள் செயல். அதுபோல், நல்ல கருத்துகளை இவ்வாறு இனிய எளிய பிழையில்லாத செந்தமிழில் எழுதி வழங்குவது தமிழ் அறிஞர்க்குத் தகுதி.