பக்கம்:சுந்தர காண்டச் சூறாவளி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



6
சுந்தரகாண்டச்

யாளர் மாறுபடுகிறார். வால்மீகியும் இருவரையும் தெய்வப் பிறவிகளாகக் கூறியுள்ளாராம். வால்மீகி பொதுவாக இருவரையும் தெய்வங்களாக - அதாவது - தெய்வங்கள் போல் போற்றியிருக்கலாம். ஆனால் இருவரையும் மக்கள் பிறவிகளாகவே வால்மீகி கூறியுள்ளார். இது பற்றிய இரு பேரறிஞர்களின் கருத்துக்களை இங்கே தருகிறேன்:-

1. மூதறிஞர் இராஜாஜி அவர்கள் எழுதியுள்ள 'சக்கரவர்த்தி திருமகன்' என்னும் நூலில் உள்ள ஒரு சிறு பகுதி வருமாறு:-

"வால்மீகி ரிஷியின் காவியத்தில் இராமனுடைய நடவடிக்கைகளை ஈசுவர அவதாரமாக வைத்து எழுதவில்லை. சில அதிகாரங்களிலும் இங்குமங்கும் சுலோகங்களிலும் தெய்வ அவதார விஷயத்தைச் சொல்லி வந்தாலும், மொத்தத்தில் வால்மீகி இராமாயணத்தில் காணப்படும் ராமன் ஒரு சிறந்த ராஜகுமாரன்; வீரபுருஷன்; அபூர்வமான தெய்வநற்குணங்கள் பெற்றவன், அம்மட்டே; கடவுளாக வேலை செய்யவில்லை. ... ... ராமாவதாரத்தை வால்மீகியைப் போல் வெறும் ஒரு வீர புருஷனைப் பற்றிய கதையாக எழுதமுடியாத நிலையிலும் காலத்திலும் கம்பரும் துளசிதாசரும் பாடினார்கள்." - என்பது இராஜாஜியின் கருத்து.

2. ஒராண்டு (ஆண்டு நினைவில்லை) புதுவைக் கம்பன் விழாவில் முன்னாள் நீதிபதி மாண்புமிகு மு. இசுமாயீல் தலைமை தாங்கினார். தலைமையுரைக்கு முன்பு, அப்போது புதுவை அரசின் தலைமைச் செயலாளராக இருந்த உயர்திரு பார்த்தசாரதி என்பவர் விழாவின் தொடக்க உரை யாற்றினார். அவர் செளலப்பியம் பற்றிப் பேசினார். திருமால் இராமனாக வந்து எளிய முறையில் மக்களோடு பழகி அருள் புரிந்தார் என்றெல்லாம் அவர் கூறினார்.