பக்கம்:சுயம்வரம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

11

அழுகிற பிள்ளையைத் தூக்கி வைத்துக்கொள்ளும் ‘ஆயா’வாக என்னை இருக்கச் சொல்கிறாயா, நீ அதெல்லாம் என்னிடம் நடக்காது!” என்றாள் சாரதாம்பாள் குறுக்கே பாய்ந்து.

“நீங்கள் சொன்ன நீலாவை நான் மணந்து கொண்டிருந்தால் நீ அடுப்படிக்கு அதிகாரி, அழுகிற பிள்ளைக்குப் பாட்டி. இல்லையென்றால் அடுப்படி ஆள்; அழுகிற பிள்ளைக்கு ஆயா! அநியாயம் அம்மா, அநியாயம்!” என்றான் அந்த ‘ஹீரோ’, அம்மாவின் பக்கம் திரும்பி.

“இனி அவனுடன் என்னடி, பேச்சு? நீ வா, இந்தப் பட்டணத்துக்கே ஒரு முழுக்கைப் போட்டுவிட்டு நம்முடைய கிராமத்துக்கு நாம் போய்விடுவோம்!” என்று அன்றே மூட்டையைக் கட்டிவிட்டார் சம்பந்தம்.

மாதவன் என்னும் அந்த ‘மாபெரும் லட்சியவாதி’ அவரைத் தடுக்கவில்லை. தடுக்காததோடு மட்டுமல்ல; “காலையில் நடந்த கலியாணத்தைத்தான் கூட இருந்து நடத்தி வைக்கவில்லையென்றால், இரவு நடக்கப்போகும் ‘சாந்திக் கலியாண’த்தையாவது உடனிருந்து நடத்தி வைக்கக் கொடுத்து வைத்திருக்கக் கூடாதா, அவர்கள்? பாவம்! ஐயோ, பாவம்!” என்று அவன் அவர்களுக்காக இரங்கிக் கொண்டே, மதனாவின் தலையிலிருந்த மல்லிகை மொட்டுக்களில் ஒன்றை எடுத்து முகர்ந்து பார்த்தான்.

‘சாந்திக் கல்யாணம்’ என்றதும் முகம் சிவந்த மதனா, “ஐயே! மூஞ்சைப் பாரு மூஞ்சை!” என்றாள் பட்டிக்காட்டுப் பெண்ணைப் போல ஒரு முறுக்கு முறுக்கி நின்று.

“இன்னுமா உன் மூஞ்சியையே பார்த்துக் கொண்டிருக்கச் சொல்கிறாய் என்னை? இப்படி வா!” என்று கதாநாயகியின் கையைப் பற்றினான் கதாநாயகன்.

“ரொம்ப அழகாய்த்தான் இருக்கிறது, கையை விடுங்கள்!” என்று அவன் பற்ற வந்த கையை உதறியெறிந்தாள் அவள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/14&oldid=1384792" இலிருந்து மீள்விக்கப்பட்டது