பக்கம்:சுயம்வரம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

152


கொண்ட மாதவன், மதனாவை அழைத்துக்கொண்டு தடதடவென்று மாடிப் படிகளில் இறங்கினான்.

அப்போது, "எல்லாம் உன்னால் வந்த வினை! நீ மட்டும் அந்த 'விசிட்டிங் கார்'டை அங்கே தவறவிடாமல் இருந்திருந்தால் அந்தப் பயல் இங்கே வந்திருக்க முடியுமா? அந்த மதனாதான் என்னிடமிருந்து தப்பியிருக்க முடியுமா?" என்று ஆனந்தன் அருணாவிடம் சொல்வது அவன் காதில் விழுந்தது!

அதற்குள் 'திபு திபு'வென்று அந்த 'சொர்க்கபுரிக்'குள் நுழைந்த போலீசார், "யார் எங்களுக்குப் போன் செய்தது?" என்று தங்களுக்கு எதிரே வந்த மாதவனைக் கேட்க, "நான் தான் ஒரு காலத்தில் நீதிக்கு அதிபதியாயிருந்தவர் வீட்டில் இன்று நடந்துகொண்டிருக்கும் அநீதிகளை நீங்களே போய்ப் பாருங்கள்!" என்று அவர்களிடம் சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு வெளியேறினான் அவன்.

வழியில், "இனி அருணாவும் ஆனந்தனும் என்ன ஆவார்கள்?" என்று மாதவனைக் கேட்டாள் மதனா.

"அவர்கள் என்ன ஆவார்களோ என்னவோ, 'நாம் என்ன ஆனோம்?' என்று தெரியாமல் இந்நேரம் என் அம்மாவும் அப்பாவும் வேதனையால் துடித்துக் கொண்டிருப்பார்கள். எல்லாம் நமக்கு நாமே செய்து கொண்ட சுயம்வரத்தால் வந்த வினை!" என்றான் மாதவன் அலுப்புடன்.

"அதனால்தான் அந்த நாளில் சுயம்வரம் கூடப் பெற்றோருக்குத் தெரிந்தே நடந்துவந்தது போலிருக்கிறது!" என்ற மதனா, "அது சரி, நம்மை ஏற்றுக்கொள்வதாக உங்கள் பெற்றோர் சொல்லிவிட்டார்களா?" என்றாள் அந்த நிலையிலும் ஆர்வத்துடன் அவனுடைய தோள்களைப் பற்றி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/154&oldid=1384902" இலிருந்து மீள்விக்கப்பட்டது