பக்கம்:சுயம்வரம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

19

இதைக் கேட்டதும் அவள் ஒரு ‘புல் லெங்த் சிரிப்பு’ச் சிரித்தாள்; அவனும் ஒரு ‘புல் லெங்த் சிரிப்பு’ச் சிரித்தான்.

இந்தச் சிரிப்பொலிகளை கேட்டோ என்னவோ, “யார் அது?” என்று குரல் கொடுத்தபடி மாதவன் தெருக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வர, அவனைக் கண்டதும் பெண் புலியான அருணா பதுங்க, ஆண் சிங்கமான ஆனந்தன் மார்பை முன்னால் தள்ளிக்கொண்டு வந்து நின்று, “ஏன், நான்தான் என்ன வேண்டும், உனக்கு?” என்றான், ‘எம்.ஜி.எம். சிங்கம்’ போல.

மாதவன் வராந்தா விளக்கைப் போட்டு அவன் முகத்தைப் பார்த்துவிட்டு, “அட, அப்கோர்ஸ் ஆனந்தனா? வாப்பா வா, நல்ல சமயத்தில்தான் வந்திருக்கிறாய்! உன்னால் ஒரு உதவி செய்ய முடியுமா?” என்றான் கெஞ்சும் குரலில்.

“என்ன உதவி?”

“ஊரிலிருந்து என் மாமா வந்திருக்கிறார்...”

“தெரியும்...”

“தெரியுமா அது எப்படி?”

“ரொம்ப நாட்களுக்கு முன்னால் வந்தது, வீடு தெரியவில்லை என்று அவர் வீதிவீதியாக அலைந்து கொண்டிருந்தார்; நான்தான் ‘இதோ இருக்கிறது’ என்று அவரைக் கொண்டு வந்து இங்கே சேர்த்தேன்!”

“அட, பாவி! நீ நாசமாய்ப் போக!”

“ஏண்டா, நான் செய்த உதவிக்கு நன்றியா இது? ”

“போனால் போகிறது, ஒரு டஜன் நன்றி வேண்டுமானாலும் சொல்கிறேன், இன்னும் ஒரே ஒரு உதவி செய்யடா மாமாவுக்குத் தூக்கம் வரவில்லையாம்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/22&oldid=1384615" இலிருந்து மீள்விக்கப்பட்டது